

கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் உடன் அமைச்சர் ராமலிங்க ரெட்டி
பெங்களூரு: கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் கடந்த 3-ம் தேதி பதவியேற்றார். அவருடன் துணை முதல்வர் உட்பட 12 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இதில் மூத்த அமைச்சர் ராமலிங்க ரெட்டிக்கு நீர்வளத் துறை ஒதுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ராமலிங்க ரெட்டி நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவியேற்ற 2-வது நாளிலே மூத்த அமைச்சர் ராஜினாமா செய்ததால் முதல்வருக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து முதல்வர் டி.கே. சிவகுமார், ராமலிங்க ரெட்டியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அவருடன் 2 முறை தொலைபேசியில் பேசிய அவர், உடனடியாக ராஜினாமா கடிதத்தைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தினார்.
முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் ராமலிங்க ரெட்டியிடம் இதுகுறித்து பேசினர். இதைத் தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஒரு மணி நேரம் ஆலோசித்தார்.
இந்நிலையில் முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ராமலிங்க ரெட்டி என் நண்பர். அவரது பிரச்சினை பேசி முடித்தாகி விட்டது. அவர் எனக்கு வாட்ஸ் அப்பில் தான் ராஜினாமா கடிதம் அனுப்பினார். அதனை திரும்ப பெறுவதாக கூறிவிட்டார். எனவே அதை பெரிதுபடுத்த வேண்டாம். புதிய கதைகளை உருவாக்கி அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம்’’ என்றார்.