ஷுப்மன் கில்லை முந்திய ஷேய் ஹோப்: 2025-ல் டாப் 5 பேட்டர்கள் யார் யார்?

ஷுப்மன் கில்லை முந்திய ஷேய் ஹோப்: 2025-ல் டாப் 5 பேட்டர்கள் யார் யார்?

Published on

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓர் அணியாக மீண்டெழத் துடிக்கும் மேற்கு இந்திய தீவுகள் அணியில் ஷேய் ஹோப் மட்டும் பெரிய ‘ஹோப்’ ஆகத் திகழ்கிறார். மே.இ.தீவுகள் கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் ஷேய் ஹோப்.

கிறைஸ்ட்‌ச்சர்ச் முதல் டெஸ்டில் நியூசிலாந்துக்கு எதிரான அந்த வரலாற்று டிரா செய்தபோது ஜஸ்டின் கிரேவ்ஸ் நங்கூரம் போல் நின்று கிமார் ரோச்சுடன் பெரிய கூட்டணி அமைத்து நியூஸிலாந்துக்கு வெற்றி வாய்ப்பை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தினார்.

ஆனால் அதே போட்டியில் அதற்கு முன் கடுமையான சூழ்நிலைகளில் ஹோப் அடித்த சதம்தான் அணியின் பிற வீரர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டியது என்றால் மிகையாகாது.

புதன்கிழமை வெலிங்டன் பேசின் ரிசர்வில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட்டின் முதல் நாளில் மீண்டும் ஹோப் தான் அணியின் நம்பிக்கையாகத் திகழ்ந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 205 ரன்களுக்கு சரிந்திருந்தாலும், ஹோப் அதில் 48 ரன்கள் எடுத்து தன் திறமையை முத்திரையாகப் பதித்தார்.

இந்த இன்னிங்ஸ் அவரை 2025-ஆம் ஆண்டின் அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக உயர்த்தியுள்ளது.

இந்திய கேப்டன் கில்-ஐ முந்தி 2025-ம் ஆண்டில் முதலிடம்:

அனைத்து ஃபார்மெட்டிலும் இந்த ஆண்டில் ஹோப் மொத்தம் 41 போட்டிகளில் 47 இன்னிங்ஸ்களில் 1,749 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஐந்து சதங்கள், ஒன்பது அரைசதங்கள் அடங்கும். இதனால் இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லின் 1,736 ரன்களை முந்தினார்.

கில் இங்கிலாந்தில் நடந்த வரலாற்றுத் தொடரில் டெஸ்ட் கேப்டனாக மிகச் சிறப்பாக விளையாடி 754 ரன்கள் குவித்திருந்தாலும், சமீபத்திய வெள்ளை பந்துப் போட்டிகளில் சற்று சரிவைக் கண்டுள்ளார். இருப்பினும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மீதமுள்ள நான்கு T20 போட்டிகளில் அவர் 2025-ஆம் ஆண்டின் முன்னணி ரன் கெட்டராக மீண்டு வர வாய்ப்பு இன்னும் உள்ளது.

2025-ல் டாப் 5 பேட்டர்கள்:

  1. ஷேய் ஹோப் (வெஸ்ட் இண்டீஸ்) – 1,749 ரன்கள்

  2. ஷுப்மன் கில் (இந்தியா) – 1,736 ரன்கள்

  3. பிரையன் பென்னெட் (ஜிம்பாப்வே) – 1,585 ரன்கள்

  4. சல்மான் அலி ஆகா (பாகிஸ்தான்) – 1,569 ரன்கள்

  5. ஜோ ரூட் (இங்கிலாந்து) – 1,540 ரன்கள்

இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட் இந்த ஆண்டில் இதுவரை 31 போட்டிகளில் 1415 ரன்கள் சேர்த்துள்ளார். இவர் ஆஷஸ் தொடரில் ஃபார்முக்கு வந்தால் இவரும் அதிக ரன்கள் போட்டியில் இணைவார். அடுத்தடுத்த இடங்களில் அதிக ரன் எடுத்தவர்களாக ஹாரி புரூக், ரச்சின் ரவீந்திரா, கே.எல்.ராகுல் ஆகியோர் உள்ளனர்.

ஷுப்மன் கில்லை முந்திய ஷேய் ஹோப்: 2025-ல் டாப் 5 பேட்டர்கள் யார் யார்?
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கு சமூக வலைதள தடை - ஆதரவும் எதிர்ப்பும் வலுப்பது ஏன்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in