

வெற்றியை கொண்டாடும் செனகல் அணி வீரர்கள்
ரபாத்: நடப்பு ஆப்பிரிக்க Cup of Nations தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது செனகல் கால்பந்தாட்ட அணி. ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது செனகல் அணி.
மொராக்கோவில் நடைபெற்ற இந்த தொடரில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன. கடந்த டிசம்பர் 21-ம் தேதி இந்த தொடர் ஆரம்பமானது. மொத்தம் 52 ஆட்டங்கள். இறுதிப் போட்டியில் செனகல் மற்றும் மொராக்கோ அணிகள் விளையாடின.
இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் 90 நிமிடங்கள் வரை கோல் எதுவும் பதிவு செய்யவில்லை. இதனால் ஆட்டம் கூடுதல் நேரம் வரை சென்றது. அதில் விஏஆர் அடிப்படையில் மொராக்கோ அணிக்கு பெனால்ட்டி கிக் வழங்கினார் காங்கோவை சேர்ந்த ஆட்ட நடுவர் ஜீன். ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து செனகல் அணி வீரர்கள் களத்தில் இருந்து வெளியேறினார். சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் அவர்கள் மீண்டும் களத்தில் திரும்பினர். அப்போது மொராக்கோ வீரர் டயஸின் பெனால்ட்டி கிக்கை எளிதாக தடுத்தார் செனகல் அணியில் கோல் கீப்பர் மென்டி.
கூடுதல் நேரத்தில் செனகல் வீரர் Gana Gueye கோல் பதிவு செய்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் இரண்டாவது முறையாக செனகல் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
வழக்கமாக கால்பந்து போட்டிகளில் இரு அணிகளின் வீரர்கள் முட்டல், மோதலில் ஈடுபடுவர். இது அந்த அணிகளின் பார்வையாளர்கள் மத்தியிலும் எதிரொலிக்கும். அது அப்படியே இந்தப் போட்டியில் எதிரொலித்தது. நடுவரின் பெனால்ட்டி முடிவுக்கு செனகல் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். அந்த அணிக்கு ஆதரவாக போட்டியை காண மைதானத்துக்கு வந்திருந்த ரசிகர்களும் அதை வெளிப்படுத்தினர். சிலர் ஆட்ட களத்துக்குள் நுழைய முயன்றனர். இந்த களேபரங்களுக்கு பின்னர் செனகல் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. சர்ச்சை, பதட்டத்துக்கு மத்தியில் இந்த இறுதிப் போட்டி நடைபெற்றது.