

மதுரை: உடல் எடையை குறைக்க, யூடியூப் பார்த்து நாட்டு மருந்து சாப்பிட்ட மதுரை கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த வேல்முருகன் மகள் கலையரசி (19). இவர், மதுரையிலுள்ள அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரி ஒன்றில் இளங்கலை 2-ம் ஆண்டு படித்தார். உடல் எடையை குறைப்பது குறித்த வீடியோக்களை யூடியூப்பில் பார்த்து வந்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்ட குறிப்புகளின்படி கீழமாசி வீதியிலுள்ள நாட்டு மருந்து கடை ஒன்றில் கடந்த 17-ம் தேதி மருந்து பொருட்களை வாங்கி வந்து சாப்பிட்டுள்ளார்.
சிறிது நேரில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவரை நெல்பேட்டை பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய அவருக்கு ஜன.18-ம் தேதி மீண்டும் வாந்தி, மயக்கம் வந்தது. மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில் செல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.