

பிரேசில் முன்னாள் நட்சத்திரக் கால்பந்து வீரர் ரொனால்டோவின் ஜெர்சியும் நம்பர் 9, இப்போது தங்கப் பந்து (Ballon d'Or) விருது வென்றுள்ள இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேனின் ஜெர்சியும் நம்பர் 9. இதனையடுத்து ஹாரி கேனுக்குக் கிடைத்த விருது அவருக்கு முழுதும் தகுதியானதே என்று பிரேசில் ரொனால்டோ புகழாரம் சூட்டியுள்ளார்..
பிரேசில் நட்சத்திரம் ரொனால்டோ 1997 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் இதே தங்கப்பந்து விருதை வென்று சாதனைப் படைத்தவர். 33 வயதான இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் பியுன்டெஸ்லிகா மற்றும் சாம்பியன்ஸ் லீக்கில் பேயர்ன் மியூனிக் அணிக்காக சிறப்பாக விளையாடி, இங்கிலாந்தை உலகக் கோப்பை அரையிறுதிக்கு வழிநடத்தி, 73 கோல்களை அடித்தவர். இந்த கௌரவத்தைப் பெறும் ஐந்தாவது இங்கிலாந்து வீரர் இவராவார், மேலும் 2001-ல் மைக்கேல் ஓவனுக்குப் பிறகு இதனைப் பெறும் முதல் வீரரும் ஹாரி கேன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கால்பந்து உலகின் மதிப்பு மிக்க விருதான இந்த தங்கப் பந்து விருதில் பிரான்ஸ் நட்சத்திரம் கைலியன் எம்பாப்பே மற்றும் ஸ்பெயின் இளம் நட்சத்திரம் லாமைன் யமால் ஆகியோரின் கடும் போட்டிகளைக் கடந்து விருதை வென்றுள்ளார்.
இது தொடர்பாக பிரேசில் ரொனால்டோ பாட்காஸ்ட் ஒன்றில் கூறிய போது, “இது உண்மையில் ஹாரி கேனுக்கு மிகவும் தகுதியான விருதே. அவருக்கு இந்த விருது கிடைத்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு ஒரு காரணம் உள்ளது, எனக்குப் பிறகு என்னைப் போன்றே நம்பர் 9 ஜெர்சி வீரருக்கு இந்த விருது கிடைத்துள்ளதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
நம்பர் 9 ஜெர்சி இப்படி ஒரு விருதை வென்று நீண்ட காலமாகி விட்டது. ஹாரி கேன் மிக நல்ல மனிதர், எனவே இந்த விருதைப் பெற அவர் முழுத் தகுதியுடையவர். அவருக்காக நான் மிக மிக மகிழ்கிறேன்.
மைக்கேல் ஓவனுக்குப் பிறகு இவர் இந்த விருதை வெல்கிறார் என்பது இங்கிலாந்துக்கு நல்லது, கால்பந்தாட்டத்திற்கு நல்லது. ஆனாலும் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், உலகின் சிறந்த வீரரைத் தேர்வு செய்யும் நடைமுறைகளில் இன்னமும் வெளிப்படைத் தன்மை இல்லை என்றே கருதுகிறேன். கேப்டன்கள், ஜர்னலிஸ்ட்கள் வாக்களிக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் ஹாரி கேன் ஒரு சிறந்த ஸ்ட்ரைக்கர் என்பதில் ஐயமில்லை.
எங்கள் காலத்தில் களத்தில் கில்லர்கள் இருந்தனர், எங்கள் தலைமுறையினருக்குப் பாதுகாப்பு இல்லை. நான் விளையாடிய இடங்களிலெல்லாம் கில்லர்கள் இருந்தனர். எங்களுக்குப் பாதுகாப்பு இருந்ததில்லை. கடவுளுக்கு நன்றி இப்போது வீரர்கள் பாதுகாக்கப்படுகின்றனர். என் காலத்தில் இத்தனைப் பாதுகாப்பு இல்லாதை நினைத்து வருந்துகிறேன்.” என்றார் ரொனால்டோ.
இப்போது களத்தில் நட்சத்திர வீரர்களுக்குப் பாதுகாப்பாக நிறைய விதிமுறைகள், பெனால்டிகள், ரெட்கார்டுகள் என்று நிறைய வந்து விட்டதைத்தான் இப்படிக் கூறுகிறார் ரொனால்டோ.