

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் வரும் 9-ம் தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது.
இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான், தொடக்க வீரர் இமாம் உல் ஹக், துணை கேப்டன் சல்மான் ஆகா, இடது கை சுழற்பந்து வீச்சாளர் அலி உஸ்மான், வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அமீர் ஜமால், பேட்ஸ்மேன் அவைஸ் ஜாஃபர், வேகப்பந்து வீச்சாளர் குர்ரம் ஷாசாத் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உடனடியாக பாகிஸ்தான் திரும்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்களுடன் தலைமை பயிற்சியாளர் சர்ஃபராஸ் அகமது, பந்து வீச்சு பயிற்சியாளர் உமர் குல் ஆகியோரையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விடுவித்துள்ளது. ஒருநாள் போட்டிக்கான பயிற்சியாளர்களான மைக் ஹஸ்ஸன், ஆஷ்லி நோஃப்கே ஆகியோர் கடைசி டெஸ்ட் போட்டிக்கு பயிற்சியாளர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி டெஸ்ட் போட்டிக்கான அணியில் சைம் அயூப், அப்துல்லா பாஸல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் அராபத் மின்ஹாஸ், முகமது இம்ரான் ஜூனியர், சாத் பெய்க், முகமது இம்ரான் ரந்தவா, ரசாவுல்லா ஆகிய 5 வீரர்கள் அறிமுக வீரர்களாக இடம் பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் அணி விவரம்: பாபர் அஸம் (கேப்டன்), சைம் அயூப், சஜித் கான், சவுத் ஷகீல், ஷான் மசூத் உபைது ஷா, அப்துல்லா ஃபசல், அராபத் மின்ஹாஸ், அஸான் அவாய்ஸ், முகமது அப்பாஸ், முகமது அலி, முகமது இம்ரான், முகமது இம்ரான் ஜூனியர், முகமது காசி கோரி, ரசாவுல்லா, சாத் பெய்க்.