

சிஎஸ்கே பயிற்சியாளர் ஹஸ்ஸி
லக்னோ: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் இரவு லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் 188 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணி 16.4 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிட்செல் மார்ஷ் 38 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்ட லக்னோ அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. 12 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 வெற்றி, 8 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் தொடர்கிறது. 5 முறை சாம்பியனான சிஎஸ்கேவுக்கு இந்த தோல்வியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
12 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கே அணி 6 வெற்றி, 6 தோல்விகளுடன் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் சிஎஸ்கே அணி எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும் கட்டாயமாக வெற்றி பெற வேண்டும். இது நிகழ்ந்தாலும் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்தே சிஎஸ்கே அணியின் அடுத்த வாய்ப்பு தெரிய வரும்.
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக்கேல் ஹஸ்ஸி கூறியதாவது:
இனி நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி போன்றதுதான். ஏனெனில் நாங்கள் இப்போது அந்த சூழ்நிலையில்தான் இருக்கிறோம். எஞ்சியுள்ள 2 போட்டியிலும் நாங்கள் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். நான் புள்ளிகள் பட்டியலை தீவிரமாக பார்க்கவில்லை. ஆனால் முதல் நான்கு இடங்களில் கடைசி சில இடங்களுக்காக நிறைய அணிகள் கடுமையான போட்டியில் இருக்கின்றன என்பது தெளிவாக தெரிகிறது.
இதுதான் தொடரின் நிலை, எங்கள் மீது மட்டும் அல்ல மற்ற அணிகள் மீதும் கடுமையான அழுத்தம் இருக்கிறது. சில விசித்திரமான நிகழ்வுகள் நடைபெறுவதையும் நீங்கள் பார்க்கலாம். எனவே, எங்களுக்கு இன்னும் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் எங்களுடைய வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும். நாங்கள் விளையாட உள்ள கடைசி 2 ஆட்டங்களின் முடிவு எங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும். தற்போது தொடர் இறுதிக்கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக நகர்கிறது.
அதனால் தான் இது உலகிலேயே மிகச்சிறந்த தொடர்களில் ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால், தொடரின் இந்த நிலையிலும் 2 அணிகள் மட்டும்தான் அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளன. எங்களுக்கு கீழே இருக்கும் அணிகளுக்குக் கூட, தத்துவார்த்த ரீதியாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல இன்னும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, இது அனைவருக்கும் அற்புதமான வாய்ப்பு.
லக்னோ ஆடுகளத்தில் 187 ரன்கள் என்பது சிறப்பான ஸ்கோர் தான். ஆனால் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் அதை மிட்செல் மார்ஷும், ஜோஷ் இங்லிஷும் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த ஜோடியை தொடக்கத்திலேயே பிரித்து நடுவர்களில் அழுத்தம் கொடுப்பதே எங்களது திட்டமாக இருந்தது. ஆனால் அவர்கள், நன்கு செட்டிலாகிவிட்டார்கள். துரதிருஷ்டவசமாக எங்களால் அந்த ஜோடியை தாமதமாகவே பிரிக்க முடிந்தது. இவ்வாறு மைக்கேல் ஹஸ்ஸி கூறினார்.