முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஆர்சிபி: WPL 2026

முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஆர்சிபி: WPL 2026
Updated on
1 min read

வதோதரா: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்த சீசனில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

திங்கட்கிழமை அன்று வதோதராவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியுடன் ஆர்சிபி விளையாடியது. இந்த ஆட்டத்தில் டாஸை இழந்து முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் கவுதமி நாயக், 55 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். ரிச்சா கோஷ் 27 மற்றும் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 26 ரன்கள் எடுத்தனர். உதிரிகளாக ஆர்சிபி அணிக்கு 21 ரன்களை கொடுத்திருந்தது குஜராத் ஜெயண்ட்ஸ்.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை குஜராத் ஜெயண்ட்ஸ் அணி விரட்டியது. அந்த அணி 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. தொடர்ந்து சீரான இடைவெளியில் அந்த அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. அந்த அணிக்கு கேப்டன் ஆஷ்லே கார்ட்னரின் ஆட்டம் மட்டுமே ஆறுதல் தரும் விஷயமாக அமைந்தது. 43 பந்துகளில் 54 ரன்களை அவர் விளாசினார். 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்தது குஜராத் ஜெயண்ட்ஸ். இதன் மூலம் 61 ரன்களில் ஆர்சிபி வெற்றி பெற்றது.

ஆர்சிபி தரப்பில் சாயாலி 3 மற்றும் டி கிளார்க் 2 விக்கெட் கைப்பற்றினர். லாரன் பெல், ராதா யாதவ் மற்றும் ஸ்ரேயங்கா பாட்டீல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

ஆர்சிபி வெற்றி நடை: நடப்பு சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி, ஐந்திலும் வெற்றி பெற்றுள்ளது ஆர்சிபி. மும்பை, யு.பி, டெல்லி மற்றும் குஜராத் அணிகளை ஆர்சிபி வீழ்த்தி உள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் அந்த அணி முதலிடத்தில் உள்ளது. மேலும், இந்த சீசனில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி உள்ளது. கடந்த 2024 சீசனில் இந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஆர்சிபி: WPL 2026
பதற்றமான இறுதி ஆட்டத்தில் மொராக்கோவை வீழ்த்தி பட்டம் வென்ற செனகல் - Africa Cup of Nations

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in