

புவனேஷ்வர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - ஒடிசா அணிகள் இடையிலான ஆட்டம் புவனேஷ்வரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஒடிசா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்துபேட் செய்த தமிழ்நாடு அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 83 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்ஜன் பால் 78, ஆந்த்ரே சித்தார்த் 56, ஆதிஷ் 50 ரன்கள் சேர்த்தனர். நாராயணன் ஜெகதீசன் 7, வித்யூத் 12, குருசாமி அஜிதேஷ் 0, சோனு யாதவ் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். நிதிஷ் ராஜகோபால் 54, கேப்டன் சாய் கிஷோர் 12 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
ஒடிசா அணி தரப்பில் ராஜேஷ் மொகன்டி, கோவிந்தா பாட்வார் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். கைவசம் 3 விக்கெட்கள் மீதம் இருக்க இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது தமிழ்நாடு அணி.
ஷுப்மன் கில் டக்-அவுட்
பஞ்சாப் - சவுராஷ்டிரா அணிகள் இடையிலான ஆட்டம் சவுராஷ்டிராவில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா அணி 47.1 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜெய் கோகில் 82 ரன்கள் சேர்த்தார். ரவீந்திர ஜடேஜா 7 ரன்களில் நடையை கட்டினார். பஞ்சாப் அணி சார்பில் ஹர்பிரீத் பிரார் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 40.1 ஓவர்களில் 139 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் ஷுப்மன் கில் 2 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் பார்த் புட் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
பிரப்சிம்ரன் சிங் 44, அன்மோல்பிரீத் சிங் 35 ரன்கள் சேர்த்தனர். சவுராஷ்டிரா அணி தரப்பில் பார்த் புட் 5 விக்கெட்களை வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜா, தர்மேந்திரசிங் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
33 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய சவுராஷ்டிரா அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 6 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்தது. ஹர்விக் தேசாய் 6, சிராக் ஜானி 5, ஜெய் கோகில் 8 ரன்களில் வெளியேறினர்.
தர்மேந்திரசிங் ஜடேஜா 5 ரன்களுடன் களத்தில் இருந்தார். கைவசம் 7 விக்கெட்கள் இருக்க, 57 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள சவுராஷ்டிரா அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது. முதல் நாள் ஆட்டத்தில் மட்டும் 23 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.