

ஜெய்ப்பூர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழகம் - ராஜஸ்தான் அணிகள் இடையிலான போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த ராஜஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 85 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்திருந்தது. கரண் லம்பா 103, மஹிபால் லாம்ரோர் 31 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணி 115.3 ஓவர்களில் 363 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. கரண் லம்பா 113 ரன்களில் சோனு யாதவ் பந்திலும், மஹிபால் லாம்ரோர் 66 ரன்களில் தீபேஷ் தேவேந்திரன் பந்திலும் ஆட்டமிழந்தனர். தமிழக அணி தரப்பில் தீபேஷ் தேவேந்திரன், சரவண குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதையடுத்து பேட் செய்த தமிழக அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 50 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. சாய் சுதர்சன் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். நாராயணன் ஜெகதீசன் 55, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 58, பாபா இந்திரஜித் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். ஆந்த்ரே சித்தார்த் 21, சோனு யாதவ் ரன் ஏதும் சேர்க்காமல் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.