ஐரோப்பிய டி20 லீக் அணியின் உரிமையாளரானார் ராகுல் திராவிட்

ஐரோப்பிய டி20 லீக் அணியின் உரிமையாளரானார் ராகுல் திராவிட்
Updated on
2 min read

இந்திய முன்னாள் கேப்டனும், T20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளருமான ராகுல் திராவிட் ஐரோப்பிய T20 பிரீமியர் லீக் (ETPL) தொடரில் பங்கேற்கும் “டப்ளின் கார்டியன்ஸ்” (Dublin Guardians) அணியின் உரிமையாளரானார். ஆறு அணிகள் கொண்ட இந்த டி20 தொடர் 2026 ஆகஸ்டில் தொடங்க உள்ளது.

ஐரோப்பிய டி20 பிரிமியர் லீக் தொடர் அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ராயல் டச்சு கிரிக்கெட் கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டாண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. டப்ளின், பெல்பாஸ்ட், எடின்பர்க், கிளாஸ்கோ, ராட்டர்டாம் மற்றும் ஆம்ஸ்டர்டாம் ஆகிய நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் இதில் இடம்பெறுகின்றன. மேலும், இது ஐசிசி அங்கீகாரம் பெற்ற ஐரோப்பாவின் முதல் பன்னாட்டு பிராஞ்சைஸ் T20 தொடராகும்.

“ETPL குறித்து என்னை அதிகமாக ஈர்த்தது அதன் பெரிய நோக்கமே. ஐரோப்பாவில் கிரிக்கெட்டை வளர்ப்பதற்காக அடித்தள வளர்ச்சியை வலுப்படுத்தி, அயர்லாந்து மற்றும் ஐரோப்பிய இளம் வீரர்களுக்கு முன்னேறும் வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிதான் என்னை இதில் ஈர்த்துள்ளது. டப்ளினில் ஏற்கனவே கிரிக்கெட்டிற்கான உற்சாகமான சமூகமும், வளர்ச்சிக்கான பெரிய வாய்ப்பும் இருக்கிறது. அடுத்த தலைமுறையை உருவாக்குவது எனக்கு எப்போதும் முக்கியமான விஷயம். அந்த பயணத்தில் ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று திராவிட் கூறினார்.

இந்த அணியின் இணை உரிமையாளர்களில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும் உள்ளார். மேலும் பல தற்போதைய மற்றும் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் அணிகளின் உரிமையாளர்களாக உள்ளனர். ஐரிஷ் உல்வ்ஸ் அணியின் இணை உரிமையாளர் கிளென் மேக்ஸ்வெல். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ், ஆம்ஸ்டர்டாம் ஃபிளேம்ஸ் அணியின் இணை உரிமையாளராகவும் உள்ளார்.

நேதன் மெக்கல்லம் மற்றும் கைல் மில்ஸ் ஆகியோர் எடின்பர்க் கேசில் ராக்கார்ஸ் அணியின் உரிமையாளர்கள் ஆவர். யுனிவர்ஸ் பாஸ் என்று தன்னைத் தானே அழைத்துக்கொள்ளும் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் கிளாஸ்கோ காஸ்மிக் என்னும் அணியின் இணை உரிமையாளராகவும், ஜாண்ட்டி ரோட்ஸ், ஃபாப் டுபிளெசிஸ் மற்றும் ஹென்றிக் கிளாசன் ஆகியோர் ராட்டர்டாம் டாக்கர்ஸ் அணியின் உரிமையாளர்களாகவும் உள்ளனர்.

மேலும், டுபிளெஸ்ஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இந்த தொடரில் வீரர்களாகவும் விளையாட உள்ளனர். அவர்களுடன் ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷ், டிம் டேவிட், மிட்செல் சாண்ட்னர், மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் போன்ற முன்னணி வீரர்களும் பங்கேற்க உள்ளனர். “சில பெயர்களை நான் அறிவேன்... அதில் சிலர் உண்மையிலேயே சிறந்த வீரர்கள். அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய உள்ளூர் வீரர்களுடன் அவர்கள் இணைந்து விளையாடுவது மிகச்சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

அதுவே ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஐரோப்பாவில் கிரிக்கெட்டை வளர்ப்பது என்பது தரமான போட்டிகளை நடத்துவதால் மட்டும் முடியாது என்றும், வலுவான ரசிகர் கலாச்சாரம் மற்றும் சிறந்த மைதான அனுபவம் உருவாக்கப்பட வேண்டும். அடித்தள மட்டத்தில், ரசிகர்களிடம் விழிப்புணர்வை உருவாக்குவது முக்கியம். மக்களை மைதானத்துக்கு கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க வேண்டும்,” என்று திராவிட் தெரிவித்தார்.

ஐரோப்பிய டி20 லீக் அணியின் உரிமையாளரானார் ராகுல் திராவிட்
“அடுத்த சீசனில் வலுவாக மீண்டு வருவோம்” - மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in