

ராய்ப்பூர்: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் இரவு ராய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் 167 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபி அணி ஒரு கட்டத்தில் 19 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது.
ரோமாரியோ ஷெப்பர்டு, ரஷிக் சலாம் தார் ஆகியோர் களத்தில் இருந்த நிலையில் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவையாக இருந்தது. முக்கியமான இந்த ஓவரை அனுபவம் இல்லாத ராஜ் பாவாவுக்கு கொடுத்தார் மும்பை கேப்டன் சூர்ய குமார் யாதவ். முதல் பந்தை வைடாக வீசிய ராஜ் பாவா, அடுத்த பந்தை நோ-பாலாக வீசினார். இதற்கு மாற்றாக வீசப்பட்ட பந்தில் ரோமாரியோ ஷெப்பர்டு ஒரு ரன் சேர்த்தார்.
2-வது பந்தை ராஜ் பாவா வைடாக வீசினார். எனினும் ரஷிக் சலாம் தார் ஓடியபடி ஒரு ரன் சேர்த்தார். இதற்கு மாற்றாக வீசப்பட்ட பந்தில் ரன் சேர்க்கப்படவில்லை. ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசப்பட்ட 3-வது பந்தை ரோமாரியோ ஷெப்பர்டு பேக்வேர்டு பாயின்ட் திசையை நோக்கி வலுவாக அடித்தார். ஆனால் அங்கு நின்ற திலக் வர்மா அற்புதமாக கேட்ச் செய்தார்.
11 பந்துகளை சந்தித்த ரோமாரியோ ஷெப்பர்டு 4 ரன்களில் நடையை கட்டினார். 4-வது பந்தை மீண்டும் ராஜ் பாவா வைடாக வீசினார். இதற்கு மாற்றாக வீசப்பட்ட பந்தை புவனேஷ்வர் குமார் டீப் கவர் திசையில் சிக்ஸருக்கு விளாச மும்பை அணி அதிர்ச்சியில் உறைந்தது. இதனால் ஆட்டம் முழுமையாக ஆர்சிபி பக்கம் சாய்ந்தது. கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில் 5-வது பந்தில் புவனேஷ்வர் குமார் ஒரு ரன் சேர்த்தார்.
கடைசி பந்தை ரஷிக் சலாம் தார் லாங் ஆன் திசையில் அடித்து விட்டு 2 ரன்களை விரைவாக ஓடி எடுக்க ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. புவனேஷ்வர் குமார் 7, ரஷிக் சலாம் தார் 3 ரன்கள் சேர்த்தனர். ஆர்சிபி அணிக்கு இது 7-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி 14 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள ஆர்சிபி 7 வெற்றி, 4 தோல்விகளை பதிவு செய்துள்ளது.
அதேவேளையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது 8-வது தோல்வியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்தது. 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள மும்பை அணி 3 வெற்றி, 8 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் தொடர்கிறது. ஆர்சிபி அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: ராஜ் பாவா கடந்த இரு ஆண்டுகளாக நன்றாகப் பயிற்சி எடுத்து வருகிறார்.
இந்த ஆண்டு அவரைப் பார்த்தபோது முற்றிலும் மாறுபட்ட ஆல்-ரவுண்டராகத் தெரிந்தார். இதன் காரணமாகவே கடைசி ஓவரை வீசும் பொறுப்பை அவரிடம் வழங்கினோம். அவர், அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார். பேட்டிங்கில் நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். தவறான நேரங்களில் விக்கெட்டுகளை இழந்தோம். ஆனால் நமன் திர், திலக் வர்மா ஆகியோர் பேட்டிங் செய்த விதம் அழகாக இருந்தது. அவர்கள் மன உறுதியைக் காட்டினார்கள். அவர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்.
விளையாட்டின் மீதான காதலுக்காக இனி வரும் போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாட முயற்சிப்போம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது போன்ற கடினமான நிலைகள் எங்களுக்குப் பழக்கமில்லை. இது விழுங்குவதற்கு கடினமான ஒரு கசப்பு மாத்திரைதான். இருந்தாலும், இந்த சீசன் முழுவதும் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளோம். அடுத்த ஆண்டு நாங்கள் இன்னும் வலுவாகத் திரும்பி வருவோம்.இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.