

புதுடெல்லி: கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார். மற்றொரு இந்திய வீரர் யஷ்வீர் சிங் வெண்கலத்தைக் கைப்பற்றினார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் ஈட்டி எறிதலில், ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி வென்ற சாம்பியன் வீரரான நீரஜ் சோப்ரா 85.83 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 2-ம் இடம்பிடித்தார்.
24 வயதான இந்திய வீரரான யஷ்வீர் சிங், இதே பிரிவில் 85.41 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 3-வது இடம் பிடித்து வெண்கலத்தை கைப்பற்றினார். இலங்கை வீரர் ருமேஷ் தரங்கா பதிரகே 89.75 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தைக் கைப்பற்றி தங்கம் வென்றார்.
வாழ்த்து: காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்று சாதனை புரிந்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறும்போது, “வெள்ளிப் பதக்கம் வென்று தேசத்துக்கு பெருமை சேர்த்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள். தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து புதிய சிகரங்களை தொட நீரஜ் சோப்ரா முயற்சி செய்யவேண்டும்” என்றார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “காமன்வெல்த் போட்டியில் நீரஜ் சோப்ரா சிறப்பாக செயலாற்றி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். அவருக்கு எனது நல்வாழ்த்துகள். அவர் மீண்டும் ஒருமுறை அபாரமான நிலைத்தன்மை, நிதானம், மன உறுதியை வெளிப்படுத்தியுள்ளார். அவரது வெற்றிகள் ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ள செய்கின்றன” என்றார்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோரும் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.