

புதுடெல்லி: டெல்லியில் அண்மையில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது பிரதமரை அவதூறாகப் பேசியதற்காக போராட்டக்காரர்கள் சிலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒரு வீடியோ பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
ஜந்தர் மந்தரில் என்னைப் பற்றி மட்டுமல்ல, மறைந்த எனது தாயாரைப் பற்றியும் அவதூறாகப் பேசினார்கள். அது மிகவும் மோசமான செயலாகும். இருப்பினும் இளம் வயதில் தவறுகள் நடப்பது இயல்பு. அந்தத் தவறுகளைத் திருத்திக் கொள்ள நாம் வாய்ப்பளிக்க வேண்டும்.
அவர்களை தண்டிப்பதோ, நீதிமன்றங்களுக்கு அலைக்கழிப்பதோ அல்லது அவர்களது குடும்பத்தினரை துன்புறுத்துவதோ நிலைமையை மாற்றிவிடாது. அவர்கள் வழிதவறிய குழந்தைகள். அவர்களை சரியான பாதைக்கு அழைத்துச் செல்வது நமது கடமை. நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன். சமூகமும் எனது முடிவை ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த இளைஞர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்பதற்கான தெளிவான சமிக்ஞையை பிரதமர் அளித்துள்ளார். முன்னதாக, குஜராத் முதல்வராக இருந்தபோது, தனக்கு மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்த இளைஞரை மோடி மன்னித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் மாணவர்கள் போராட்டத்தில் பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட பெண் ஒருவர், தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், “போராட்டத்தில் இருந்த சிலரின் தூண்டுதலால், பிரதமருக்கு எதிராக பல தவறான கருத்துகளை நான் பேசிவிட்டேன். எனக்கு 15 வயதுதான் ஆகிறது. (எனினும் எப்ஐஆரில் இந்தப் பெண்ணுக்கு 25 வயது என குறிப்பிடப்பட்டுள்ளது). நான் செய்தது மன்னிக்க முடியாத செயலாகும். நான் பல மோசமான வார்த்தைகளை பேசிவிட்டேன். இதுவே எனது முதல் மற்றும் கடைசித் தவறாக இருக்கும். நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் மிகவும் வெட்கப்படுகிறேன். என்னையே என்னால் பார்க்க முடியவில்லை. தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்” என்று அந்தப் பெண் கூறியுள்ளார்.