பொல்லார்டு
சென்னை: எஸ்ஏ20 லீக் தொடரில் ஜோகானஸ்பேர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதில் இருந்து ஆல்ரவுண்டர் கெய்ரன் பொல்லார்டு விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே இந்த தகவல் வெளியானது.
ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் சர்வதேச நாடுகளில் பரவலாக விளையாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் போல தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ20 லீக் தொடர் நடைபெறுகிறது. கடந்த 2023-ல் இந்த டி20 ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
இதில் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த ஆறு அணிகளின் உரிமையாளர்களும் ஐபிஎல் கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஜோகானஸ்பேர்க் சூப்பர் கிங்ஸ் என்ற அணியை கொண்டுள்ளது.
கடந்த 7-ம் தேதி அன்று அடுத்த எஸ்ஏ20 சீசனுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் மேற்கு இந்தியத் தீவுகளை சேர்ந்த கெய்ரன் பொல்லார்டை ஏலத்தில் எடுத்தது ஜோகானஸ்பேர்க் சூப்பர் கிங்ஸ் அணி. இது கிரிக்கெட் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
ஏனெனில், ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2010 முதல் 2022 வரையில் வீரராக விளையாடினார். அதன் பின்னர் கடந்த சில சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவரை ஏலத்தில் எடுத்திருந்தது ஜேஎஸ்கே.
இந்தச் சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மஹிலா ஜெயவர்த்தனே விலகினார். இதையடுத்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக கெய்ரன் பொல்லார்டு நியமிக்கப்பட்டார். இந்த பயணத்தை தானும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு பிறகு எஸ்ஏ20 லீக் தொடரில் ஜோகானஸ்பேர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக அடுத்த சீசனில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அணி நிர்வாகத்திடம் அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியானது. அணியின் தலைமை பயிற்சியாளராக பல்வேறு பொறுப்புகளை கவனிக்க வேண்டிய நிலையில், பொல்லார்டின் இந்த முடிவு வரவேற்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது.