

ஐசிசி லோகோ
வரவிருக்கும் ஆடவர் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக வங்கதேச அணி இந்தியா வருவது தொடர்பாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காகத் தங்களது அணி விளையாடும் போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே நடத்த வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளதாக ஈஎஸ்பின் கிரிக் இன்போ செய்தி வெளியிட்டுள்ளது
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வீடியோ கான்ஃபரன்ஸில் “வங்கதேச அணி உலகக் கோப்பையில் விளையாட இந்தியாவுக்குப் பயணிக்க வேண்டும், தவறினால் புள்ளிகளை இழக்க நேரிடும் (Forfeit Points)” என்று ஐசிசி திட்டவட்டமாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், அத்தகைய எந்தவொரு இறுதி எச்சரிக்கையும் ஐசிசி தரப்பிலிருந்து தங்களுக்கு வரவில்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.
வங்கதேச கிரிக்கெட் வாரியம் விடுத்திருந்த கோரிக்கையை அடுத்து ஐசிசி ஏற்பாடு செய்திருந்த இந்தச் சந்திப்பின் முடிவு குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமோ (BCCI) அல்லது வங்கதேச கிரிக்கெட் வாரியமோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
உலகக் கோப்பை அட்டவணை:
இந்தியா மற்றும் இலங்கையில் 20 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை டி20 தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறுகிறது. குரூப் சி-யில் இடம்பெற்றுள்ள வங்கதேச அணியின் அட்டவணை பின்வருமாறு:
பிப்ரவரி 7: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக (கொல்கத்தா)
பிப்ரவரி 9: இத்தாலி அணிக்கு எதிராக (கொல்கத்தா)
பிப்ரவரி 14: இங்கிலாந்து அணிக்கு எதிராக (கொல்கத்தா)
பிப்ரவரி 17: நேபாளம் அணிக்கு எதிராக (மும்பை)
டிசம்பர் 2026 ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை 9.2 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. ஆனால், அவரை அணியிலிருந்து விடுவிக்குமாறு பிசிசிஐ கொல்கத்தா அணிக்கு "அறிவுறுத்தியது".
பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா இந்த முடிவை ஊடகங்களுக்குத் தெரிவித்தார். ஆனால், ஏலத்தில் வாங்கப்பட்ட ஒரே வங்கதேச வீரரான முஸ்தபிசுரை விடுவிக்கச் சொன்னதற்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை. ஐபிஎல் நிர்வாகக் குழு கூடாமலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், சைக்கியாவைத் தவிர இதில் வேறு யாருக்குத் தொடர்பு உள்ளது என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.