டி20 உலகக் கோப்பை தேர்வின்போது பாக். வீரர்கள் பாபர், ஃபகர் ஸமான் உடற்தகுதியில் சந்தேகம்
கராச்சி: டி20 உலகக் கோப்பை தேர்வின்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் பாபர் அஸாம், ஃபகர் ஸமான் உடற்தகுதியின்றி இருந்ததாக சந்தேகம் எழுந்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்றது. இதில் இந்தியா சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது. பாகிஸ்தான் அணி, சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் 100 சதவீத உடற்தகுதியுடன் இருந்தார்களா என்று தேர்வுக்குழு மூத்த உறுப்பினர் ஆகிப் ஜாவித் சந்தேகம் எழுப்பியிருந்தார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மருத்துவக் குழுவில் பிரிட்டனைச் சேர்ந்த டாக்டர் ஜாவேத் முத்கல் இணைந்துள்ளார்.
இதுதொடர்பாக டாக்டர் ஜாவேத் முத்கலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது: அணியில் இடம்பெற்றிருந்த பாபர் அஸாம், ஃபகர் ஸமான் ஆகியோர் 100 சதவீத முழு உடற்தகுதியுடன் இல்லை. உலகக் கோப்பை போட்டிக்குப் பின்னர் அவர்களை பரிசோதித்த டாக்டர் ஜாவேத் முத்கல், இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பைப் போட்டிக்குப் பின்னர், பாகிஸ்தானில் நடைபெறும் டி20 போட்டியில் விளையாடப் போவதில்லை என்று பாபர் அஸாம் அறிவித்துள்ளார். தசைநார் முறிவு, எரிச்சல் போன்றவற்றால் தான் அவதிப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இதே பிரச்சினை தனக்கும் இருப்பதாக ஃபகர் ஸமானும் தெரிவித்துள்ளார். பாபர் அஸாமை மருத்துவர், பரிசோதித்தபோது, அவரது காயம் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டதை விட மிகவும் தீவிரமானதாக இருப்பது தெரியவந்துள்ளது.
அதேவேளையில், ஃபகர் ஸமானும் கடந்த சில மாதங்களாக இதே பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார். ஆனால், பாகிஸ்தான் அணியின் பிசியோதெரபிஸ்ட் கிளிஃப் டீக்கனிடமிருந்து ஒப்புதல் பெற்ற பின்னரே, உலகக் கோப்பை அணியில் பாபர் மற்றும் ஃபகர் ஆகியோரைத் தேர்வு செய்ததாக, தேசியத் தேர்வுக் குழுவின் மருத்துவ பிரிவிடம் தெளிவுபடுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, போட்டிக்கு முன்னரே அவர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கவேண்டும். வீரர்களுடனான தனது நெருங்கிய உறவின் காரணமாக, லேசான காயங்கள் இருந்தபோதிலும் அவர்களை விளையாட பிசியோதெரப்பிஸ்ட் டீக்கன் அனுமதித்துள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கோரிக்கைகள் எழுந்துள்ளன.
