‘அதென்ன கைகுலுக்காமல் போகும் பழக்கம்?!’ - பாகிஸ்தான் பயிற்சியாளர் வேதனை | Women’s T20 WC

‘அதென்ன கைகுலுக்காமல் போகும் பழக்கம்?!’ - பாகிஸ்தான் பயிற்சியாளர் வேதனை | Women’s T20 WC
Updated on
1 min read

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே ஆட்டத்துக்கு முன்பும், ஆட்டத்துக்கு பிறகும் கைகுலுக்கல் தொடர்பான கேள்விகள் எழுவது வழக்கமாகிவிட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) அன்று நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் போட்டிக்கும் இதே நிலை தொடர்ந்தது. போட்டிக்கு முன் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரிடமும், இந்தியாவின் அபார வெற்றிக்குப் பிறகு தீப்தி சர்மாவிடமும் இதுகுறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.

போட்டியில் இந்திய மகளிர் அணி பாகிஸ்தான் மகளிர் அணிக்கு மிகப்பெரிய தோல்வியைப் பரிசாக அளித்தது. ஆனால், கைகுலுக்கல் என்ற வழக்கமான நட்புச் செயல்பாடு சமீப காலமாக பின்னடைவு கண்டு வருகிறது.

போட்டிக்குப் பின்னர் பேசிய பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் வஹாப் ரியாஸ், “கைகுலுக்காமல் இருந்ததற்கான காரணம் என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆனால், விஷயங்கள் இப்படித்தான் செல்லப் போகின்றன என்றால், அப்படியே செல்லட்டும். அதனால் பெரிய வித்தியாசம் எதுவும் ஏற்படாது” என்றார்.

போட்டியின் செயல்பாடு குறித்து அவர் பேசுகையில், பாகிஸ்தான் அணி கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தத் தவறிவிட்டதாக ஒப்புக்கொண்டார்.

“பவர் பிளே ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால், அடுத்த மூன்று அல்லது நான்கு ஓவர்களில் விக்கெட்டுகளை இழக்காமல் ஓவருக்கு ஏழு அல்லது எட்டு ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. துரதிருஷ்டவசமாக தொடர்ந்து ஐந்து விக்கெட்டுகளை இழந்து விட்டோம். டி20 போட்டியில் அதன் பிறகு மீண்டு வருவது மிகவும் கடினம்.

கடைசி இரண்டு ஓவர்களில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தது எங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ரிச்சா கோஷுக்கு வாய்ப்பு கிடைத்தது; அதை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே மற்றும் கடைசி நான்கு ஓவர்களில்தான் ஆட்டத்தின் முடிவு அதிகம் தீர்மானிக்கப்படுகிறது

பந்துவீச்சில் எங்கள் வீராங்கனைகள் போராடிய விதமும், பேட்டிங்கில் சில நல்ல தருணங்களை வெளிப்படுத்தியதும் நேர்மறையான அம்சங்கள். இனி தவறுகளை குறைத்து, நம்பிக்கையுடன் மேலும் நேர்மறையான அணுகுமுறையில் விளையாட வேண்டும்” என்றார் வஹாப் ரியாஸ்.

‘அதென்ன கைகுலுக்காமல் போகும் பழக்கம்?!’ - பாகிஸ்தான் பயிற்சியாளர் வேதனை | Women’s T20 WC
ஹார்முஸ் ஜலசந்தியை ‘எல்என்ஜி’ எரிவாயு உடன் வெற்றிகரமாக கடந்த இந்திய சரக்கு கப்பல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in