

புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை ‘எல்என்ஜி’ எரிவாயு உடன் வெற்றிகரமாக இந்திய சரக்கு கப்பல் கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ல் போர் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இடைக்கால போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சற்று இழுபறி நிலவிய சூழலில் தற்போது இரண்டு தரப்பும் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன. வரும் வெள்ளிக்கிழமை அன்று ஜெனீவா நகரில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
மேற்காசிய போர் காரணமாக உலகின் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் ஏற்றிய கப்பல்கள் பாரசீக வளைகுடாவில் மூன்று மாதங்களுக்கும் மேலாகத் நங்கூரமிட்டு நின்றன. இந்தக் கப்பல்கள் முதல் கட்டமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணத்தை தொடங்கும். அதன் பின்னர் அதன் பயண இலக்குக்கு சென்று சேரும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிப்பதில் இருக்கும் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் உள்ளிட்ட சில காரணங்களால் எண்ணெய் விநியோக போக்குவரத்து சீராக சற்று காலம் ஆகும் என தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் ‘திஷா’ என்ற பெயர் கொண்ட இந்திய சரக்கு கப்பல், சுமார் 62,370 மெட்ரிக் டன் எல்என்ஜி எரிவாயு உடன் வெற்றிகரமாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளதாக கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இந்திய கொடி உடன் கடந்த மூன்று மாத காலமாக போர் பதற்றம் நிலவிய ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடந்துள்ள முதல் கப்பலாக இது பார்க்கப்படுகிறது.
இந்திய மொத்த எரிபொருள் பயன்பாட்டில் இயற்கை எரிவாயுவின் (எல்என்ஜி) பங்கு சுமார் 10 சதவீதமாக உள்ளது. அதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இறக்குமதி திரவ எரிவாயுவின் சதவீதம் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்.