ஃப்ளாஷ்பேக்: டாக்காவில் லாரா ருத்ரதாண்டவம் - சிக்கிச் சின்னாபின்னமான வங்கதேச அணி!

ஃப்ளாஷ்பேக்: டாக்காவில் லாரா ருத்ரதாண்டவம் - சிக்கிச் சின்னாபின்னமான வங்கதேச அணி!
Updated on: 
2 min read

1999-ம் ஆண்டின் இதே அக்டோபர் 9-ம் தேதியன்று டாக்காவில் உள்ள பங்கபந்து தேசிய மைதானத்தில் நடைபெற்ற பிமன் மில்லினியம் கப் ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் வங்கதேச அணியும் மோதின.

வங்கதேசம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது கால்களை ஊன்றிக் கொண்டிருந்த காலகட்டம் அது. மறுபுறம், பிரையன் லாரா தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அனுபவமும் அதிரடியும் நிறைந்திருந்தது. அந்த நாளில் நடந்தது, ஒரு போட்டியைக் காட்டிலும் பிரையன் லாரா என்ற மகத்தான பேட்ஸ்மேனின் பேட்டிங் ‘ஷோ’ என்றே கூற வேண்டும்.

டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர் ஷெர்வின் கேம்ப்பெல்லுடன் இணைந்து பிரையன் லாரா ஆட்டத்தைத் தொடங்கினார். ஆரம்பத்திலேயே வங்கதேச பந்துவீச்சை லாரா தனது வழக்கமான பாணியில் எதிர்கொண்டார். பந்தை நேராக அடிப்பது, கவர் திசையில் பவுண்டரி விளாசுவது, சுழற்பந்தை இறங்கி வந்து சிக்ஸருக்கு தூக்குவது என லாராவின் பேட் ஒவ்வொரு பந்தையும் தண்டித்துக் கொண்டிருந்தது.

5.1 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் 50 ரன்களை எட்டியது. கேம்ப்பெல் 30 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தபோது, அணியின் ஸ்கோர் 98 ரன்களாக இருந்தது. அதன்பிறகு ரிக்கார்டோ பவல் களமிறங்கினார். லாராவுடன் இணைந்த அவர், வங்கதேச பந்துவீச்சாளர்களுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தினார்.

குறிப்பாக காலேத் மஹ்மூத் வீசிய ஓவர்கள் லாராவின் அதிரடியை வெளிப்படுத்தின. 12-வது ஓவரில் 16 ரன்களும், 14-வது ஓவரில் 24 ரன்களும் குவிக்கப்பட்டன. 14-வது ஓவரில் மட்டும் லாரா இரண்டு சிக்ஸர்களையும் மூன்று பவுண்டரிகளையும் விளாசினார். 15 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் 160 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்தது.

லாரா அப்போது சதத்தை நோக்கி மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தார். வெறும் 45 பந்துகளில் அவர் சதத்தை நிறைவு செய்தார். அப்போது அது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே இரண்டாவது அதிவேக சதமாக இருந்தது. பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடி இலங்கைப் பந்து வீச்சைப் புரட்டி எடுத்து 37 பந்துகளில் அடித்த சதம் மட்டுமே லாராவின் சாதனையை விஞ்சி இருந்தது.

லாராவின் அந்த சதத்தில் 17 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் இடம்பெற்றிருந்தன. மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 6,000 ரன்களை கடந்த நான்காவது மேற்கிந்தியத் தீவுகள் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

ஆனால் வங்கதேசத்துக்கு அதிர்ஷ்டம் ஒரு கட்டத்தில் கைகொடுத்தது. 19.4-வது ஓவரில் பகுதி நேர ஆஃப் ஸ்பின்னரான ஹபிபுல் பஷார் பந்துவீச வந்தார். அவரது ஓவரின் நான்காவது பந்தில் லாரா போல்டாகி வெளியேறினார்.

அப்போது லாராவின் ஸ்கோர் 117. அவர் சந்தித்தது வெறும் 62 பந்துகள். அதில் 18 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும். லாரா வெளியேறியபோது மைதானம் முழுவதும் ரசிகர்கள் எழுந்து நின்று அவருக்கு கைதட்டினர். அந்த ஒரு இன்னிங்ஸ், டாக்காவில் நடைபெற்ற போட்டியை கிரிக்கெட் ரசிகர்களின் நினைவில் என்றும் நிலைத்திருக்கச் செய்தது.

லாரா வெளியேறிய பிறகு மேற்கிந்தியத் தீவுகளின் ரன் வேகம் சற்றுக் குறைந்தது. இருப்பினும், சிவ்நரைன் சந்தர்பால் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 87 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 77 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் 6 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் குவித்தது.

315 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பத்திலேயே சிக்கல்கள் ஏற்பட்டன. ஷாஹ்ரியார் ஹொசைன் 47 ரன்களும், கேப்டன் அமினுல் இஸ்லாம் 66 ரன்களும் எடுத்துப் போராடினாலும், மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சை சமாளித்து பெரிய கூட்டணியை உருவாக்க முடியவில்லை.

இந்தப் போட்டியில் பேட்டிங்கில் 28 ரன்கள் எடுத்த ஷெர்வின் கேம்ப்பெல், பந்துவீச்சிலும் வங்கதேசத்தைத் திணறடித்தார். 10 ஓவர்கள் வீசி 30 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் வங்கதேச அணி 49.1 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகள் கொண்ட பிமன் மில்லினியம் கப் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. போட்டியின் ஆட்டநாயகனாக பிரையன் லாரா தேர்வு செய்யப்பட்டார்.

ஃப்ளாஷ்பேக்: டாக்காவில் லாரா ருத்ரதாண்டவம் - சிக்கிச் சின்னாபின்னமான வங்கதேச அணி!
கவாஜா சுயசரிதை நூலின் ‘சர்ச்சை’ அத்தியாயமும், பாட் கமின்ஸ் ரியாக்‌ஷனும்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in