

கோவில்பட்டி: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதே எனது அடுத்த இலக்கு என்று காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற கோவில்பட்டியைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ராஜா தெரிவித்தார்.
கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி முத்துப்பாண்டி மகன் ராஜா (26). இவர், ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டார். 65 கிலோ எடை பிரிவில் கிளீன் மற்றும் ஜெர்க் (160), ஸ்னாட்ச் (126) என மொத்தம் 286 கிலோ எடையை தூக்கி 2-ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.
அதன் பின்னர் நேற்று முன்தினம் மாலை கோவில்பட்டி வந்த ராஜாவுக்கு சங்கரலிங்கபுரம் பளு தூக்கும் வீரர்கள் உட்பட ஏராளமானோர் வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது காமன்வெல்த் போட்டியில் வென்று இந்தியா வந்தவுடன் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்தேன்.
எனக்கு பரிசுத் தொகை வழங்கி ஊக்கப்படுத்தினார். ஆகஸ்ட் 5-ம் தேதி தமிழக முதல்வரை பார்த்தோம். அவர் எங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். அப்போது அங்கிருந்த விளையாட்டுத்துறை அமைச்சர், செயலாளர் ஆகியோர் அடுத்து கலந்து கொள்ளும் போட்டிகளுக்கு உதவுவதாக தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 9-ம் தேதி காமன்வெல்த் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் புதுடெல்லியில் பிரதமரை சந்தித்தோம். வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென அவர் எங்களுக்கு அறிவுரை வழங்கி வாழ்த்தினார்.
கோவில்பட்டியில் பளுதூக்கும் வீரர்களுக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதிலும் அதிக பளுதூக்கும் வீரர்கள் உள்ள சங்கரலிங்கபுரத்தில் எங்களுக்கு சர்வதேச அளவிலான உடற்பயிற்சி கூடம் உட்பட எந்தவித வசதிகளும் கிடையாது.
எனவே, தமிழக அரசு உடற்பயிற்சி கூடம், விளையாட்டு விடுதி போன்றவை அமைத்து கொடுத்தால் இன்னும் ஏராளமான பளுதூக்கும் வீரர்கள் வருவார்கள். இதனால் இளைஞர்கள் தவறானவழிகளில் செல்வது தடுக்கப்
படும். 2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட் நடக்கிறது. அதற்குரிய தகுதிச்சுற்று இந்தியாவில் வரும் அக்டோபரில் இருந்து தொடங்குகிறது. எனது அடுத்த இலக்கு அது தான். இவ்வாறு அவர் கூறினார்.