

கேப் டவுன்: இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி, டெஸ்ட் மற்றும் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டார். எனினும் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடும் நோக்குடன் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் விராட் கோலி விளையாடி வருகிறார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு 2014-2015-ம் ஆண்டு சீசனில் பயிற்சியாளராகவும் இருந்த ஆலன் டொனால்டு கூறியதாவது:
விராட் கோலி போன்று கிரிக்கெட்டின் மீது தீராத வேட்கை கொண்டுள்ள வீரர் ஒருவரை இதற்கு முன்னர் பார்த்தது இல்லை. அவர் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. அவரைப் போன்று மிகவும் கடினமாக பயிற்சி மேற்கொள்ள வேறு யாராலும் முடியாது. அவர் ஒரு இயந்திரம் போன்றவர்.
டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் ஆட்டத்தை நான் மிஸ் செய்கிறேன். அவர் மிகவும் சீக்கிரமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக நினைக்கிறேன். ஆனால், அவரை நாம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் கண்டிப்பாக பார்க்கலாம் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலக்கோப்பை போட்டி ஒரு அற்புதமான தொடராக இருக்கப் போகிறது.
இந்த தொடருக்கு தென் ஆப்பிரிக்கா மிகவும் வலுவான அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது. யார் போகவில்லை, யார் போக வேண்டும் என்பது போன்ற கேள்விகள் எப்போதும் இருக்கும். இந்தியா உலகிலேயே சிறந்த டி20 ஆடுகளங்களை பெற்றுள்ளது.
ஐபிஎல்லில் பவர் பிளேயில் 124 ரன்கள் எடுத்ததை நான் பார்த்திருக்கிறேன். இது எந்த பந்து ஒரு வீச்சாளருக்கும் மிகவும் கடினமான விஷயமே. இதனால் பந்துவீச்சில் கவனமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்படுவதற்கு சரியான திட்டமிடல் வேண்டும். தென் ஆப்பிரிக்காவை மீண்டும் இறுதிப் போட்டியில் பார்ப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு ஆலன் டொனால்டு கூறினார்.