

நியூஸிலாந்து அணிக்கு எதிராக நேற்று வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 25 ரன்களை எடுத்திருந்த போது சர்வதேச கிரிக்கெட்டில் 28 ஆயிரம் ரன்களை எட்டினார். இதன் மூலம் 28 ஆயிரம் ரன்களை விரைவாக எட்டிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.
இந்த மைல் கல் சாதனையை அவர், தனது 624-வது இன்னிங்ஸில் கடந்துள்ளார். இந்த வகையில் இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 644 இன்னிங்ஸிலும், இலங்கையின் குமார் சங்ககரா 666 இன்னிங்ஸிலும் 28 ஆயிரம் ரன்களை எட்டியதே சாதனையாக இருந்தது. இதனை தற்போது விராட் கோலி முறியடித்துள்ளார்.
ரன் வேட்டையில் 2-வது வீரர்:
நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 42 ரன்களை எடுத்திருந்த போது சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த இலங்கையின் குமார் சங்ககராவை (28,016 ரன்கள்) பின்னுக்குத்தள்ளினார். இந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் (34,357 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி (28,068) 2-வது இடம் வகிக்கிறார்.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 301 ரன்கள் இலக்கை இந்திய அணி போராடி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.