மீண்டும் நைட் கிளப் விவகாரம்: பென் ஸ்டோக்ஸ் கேப்டன் பதவி கேள்விக்குறி

மீண்டும் நைட் கிளப் விவகாரம்:  பென் ஸ்டோக்ஸ் கேப்டன் பதவி கேள்விக்குறி
Updated on
1 min read

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் ஆகியோர் தொடர்பாக ஏற்பட்டுள்ள ஒழுங்குமுறை மீறல் விவகாரம், இங்கிலாந்து கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு பென் ஸ்டோக்ஸ் கேப்டன்சி எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பின்னர், திங்கள்கிழமை அதிகாலை லண்டனில் உள்ள ஒரு இரவு விடுதியில் (nightclub) நடைபெற்ற சம்பவம் தொடர்பாக இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், இது “அணி விதிமுறைகளை மீறிய சம்பவம்” எனக் கூறப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலதிக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைக்காக இந்த விவகாரம் கிரிக்கெட் ஒழுங்குமுறை அமைப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம்

ஜூன் 17-ம் தேதி The Oval மைதானத்தில் தொடங்கவுள்ள இரண்டாவது டெஸ்டில் ஸ்டோக்ஸ் மற்றும் அட்கின்சன் இருவரும் விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் மிகவும் தீவிரமானதாக இருப்பதால், ஸ்டோக்ஸ் தனது கேப்டன் பதவி குறித்து கூட யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்ன நடந்தது?

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தகவலின்படி, அந்த இரவு விடுதியில் சராசென்ஸ் ரக்பி கிளப் (Saracens Rugby Club) அணியின் வீரர்களும் தங்களது சீசன் நிறைவு கொண்டாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். அப்போது அட்கின்சன் மற்றும் அந்த கிளப்பின் ஒரு அகாடமி வீரருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே சம்பவத்திற்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் உடல் காயம் ஏற்படவில்லை எனத் தெரிகிறது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது வீரர்களின் ஒழுங்கீன செயல்பாடுகள் விமர்சனத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நள்ளிரவு நேரக் கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகும் இந்த புதிய சர்ச்சை உருவாகியிருப்பது இங்கிலாந்துக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹாரி ப்ரூக் கேப்டனாக வாய்ப்பு

ஸ்டோக்ஸ் இரண்டாவது டெஸ்டில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால், அணியின் துணைக் கேப்டனான ஹாரி புரூக் தலைமையேற்க அதிக வாய்ப்பு உள்ளது.

ஸ்டோக்ஸின் கடந்தகால சர்ச்சைகள்:

ஸ்டோக்ஸ் தனது வாழ்க்கையில் இதற்கு முன்பும் பல ஒழுங்குமுறை பிரச்சினைகளில் சிக்கியுள்ளார். குறிப்பாக 2017-ஆம் ஆண்டு பிரிஸ்டல் நகரில் நடந்த தெருச் சண்டை சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் அவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், கிரிக்கெட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கிரிக்கெட் வாரியம் அவருக்கு அபராதமும் இடைநீக்கமும் விதித்தது.

இந்நிலையில், தற்போதைய விசாரணையின் முடிவு இங்கிலாந்து அணியின் எதிர்கால தலைமை அமைப்பில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கிரிக்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன.

மீண்டும் நைட் கிளப் விவகாரம்:  பென் ஸ்டோக்ஸ் கேப்டன் பதவி கேள்விக்குறி
குரூப் ‘ஐ’ பிரான்ஸ், செனகல், ஈராக், நார்வே அணிகள் எப்படி? | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in