

கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய நியூஸிலாந்து அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. டேவன் கான்வே ரன் ஏதும் எடுக்காத நிலையில் கேமர் ரோச் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் 102 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஜஸ்டின் கிரீவ்ஸ் பந்தில் வெளியறினார்.
இதன் பின்னர் சீரான இடைவேளையில் விக்கெட்கள் சரிந்தன. டாம் லேதம் 24, ரச்சின் ரவீந்திரா 3, வில் யங் 14, டாம் பிளண்டல் 29, மைக்கேல் பிரேஸ்வெல் 47, நேதன் ஸ்மித் 23, மேட் ஹென்றி 8 ரன்களில் நடையை கட்டினர். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் நியூஸிலாந்து அணி 70 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது.
ஸாக் ஃபோல்க்ஸ் 4, ஜேக்கப் டஃபி 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் ஜஸ்டின் கீரிவ்ஸ், கேமர் ரோச், ஓஜய் ஷீல்ட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.