

கயானா: மேற்கு இந்தியத் தீவுகள் - நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் இரவு கயானாவில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மோதின. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியானது நியூஸிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 37.1 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கீசி கார்ட்டி 48, அக்கீம் அகஸ்டி 26, ஷிம்ரன் ஹெட்மயர் 26 ரன்கள் சேர்த்தனர்.
நியூஸிலாந்து அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளரான ஜெய்டன் லெனாக்ஸ் 4 விக்கெட்களை வீழ்த்தினார். மிட்செல் சாண்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஒரு கட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 67 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. ஆனால் அதன் பின்னர் மேற்கொண்டு 73 ரன்களை சேர்ப்பதற்குள் விக்கெட்களை கொத்தாக தாரை வார்த்தது.
141 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 39.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. ஹென்றி நிக்கோல்ஸ் 24, வில் யங் 23, மார்க் சாப்மேன் 7, டேரில் மிட்செல் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். டாம் லேதம் 31, டீன் ஃபாக்ஸ்கிராப்ட் 22 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தனர். 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.