

இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் இன்று (ஜன.18) நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியது. இந்திய மண்ணில் சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து ராஜ்கோட்டில் நடை பெற்ற 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
இதனையடுத்து தொடரின் மூன்றாவது போட்டி இந்தூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, ஆரம்பத்தில் தடுமாறியது. எனினும் டாரில் மிட்செல் (137) மற்றும் கிளென் பிலிப்ஸ் (106) ஆகிய இருவரின் அதிரடி சதங்கள் அணியைப் ஸ்கோரை உயர்த்தின. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. இந்தியத் தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
338 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கிப் பதிலடி கொடுத்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 71 ரன்களுக்கே 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறிய நிலையில், விராட் கோலி நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடினார்.
அவர் 108 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு நம்பிக்கையளித்தார். அவருக்குத் துணையாக நிதிஷ் குமார் ரெட்டி (53) மற்றும் ஹர்ஷித் ராணா (52) ஆகியோர் அரைசதம் அடித்து அதிரடி காட்டினர். ஆனால், கோலியின் விக்கெட்டுக்குப் பிறகு இந்திய அணியின் பேட்டிங் வரிசை சரிந்தது. இறுதியில் 46 ஓவர்களில் இந்திய அணி 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நியூசிலாந்து தரப்பில் ஜாக் ஃபால்க்ஸ் மற்றும் கிறிஸ்டியன் கிளார்க் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றியைத் தடுத்தனர். நியூசிலாந்து வீரர்களின் சிறப்பான பீல்டிங் இந்திய வீரர்களைத் திணறடித்தது. விராட் கோலியின் சதம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தாலும், அணியின் தோல்வி அவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு சொந்த மண்ணில் இந்தியா சந்திக்கும் முதல் ஒருநாள் தொடர் தோல்வி இதுவாகும். 1988-ஆம் ஆண்டுக்குப் பிறகு (37 ஆண்டுகள்) இந்திய மண்ணில் நியூசிலாந்து பெறும் முதல் இருதரப்பு ஒருநாள் தொடர் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.