

புதுடெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானின் நகோயாவில் வருகிற செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ளன.
இதில், இந்தியா சார்பில் 492 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த தொடருக்கான தடகள அணியில் ஈட்டி எறிதல் நட்சத்திரமான நீரஜ் சோப்ராவும் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் கணுக்காலில் ஏற்பட்ட தசை நார் கிழிவு காரணமாக ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் 2026-ம் ஆண்டில் நடைபெறும் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் நீரஜ் சோப்ரா விலகி உள்ளார்.
இதுதொடர்பாக நீரஜ் சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறும்போது, ‘‘கடின உழைப்புக்கு பிறகு, லாசான் டைமண்ட் லீக்கில் இந்த சீசனின் சிறந்த எறிதலைப் பதிவு செய்தேன். இதன் மூலம் நான் எதிர்பார்த்த வேகத்தை அடைந்துவிட்டதாக உணர்ந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அதற்குச் சிறிது காலத்திலேயே பயிற்சியின் போது எனது கணுக்காலில் தசைநார் கிழிவு ஏற்பட்டது.
எனது மருத்துவர் மற்றும் அணியினருடன் கலந்தாலோசித்த பிறகு, இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகுவது என முடிவு செய்துள்ளோம். தற்போது எனது முழு கவனமும் நன்றாகக் குணமடைந்து, வலுவாக மீண்டு வருவதிலேயே உள்ளது.
எனது இயல்பான ரிதத்தை எட்டிவிட்டதாக உணர்ந்த தருணத்தில் இது நிகழ்ந்தது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. இருப்பினும் பின்னடைவுகள் என்பது விளையாட்டு பயணத்தின் ஒரு பகுதிதான். உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.