சென்னை: சென்னையில் ஜனவரி 4-ம் தேதி(இன்று) முதல் 11-ம் தேதி வரை 75-வது தேசிய சீனியர் கூடைப்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது.
சென்னை நேரு உள்ளரங்க மைதானம், பெத்தி செமினார் மைதானம் ஆகிய மைதானங்களில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப் பந்து சங்கம், எஸ்டிஏடி சார்பில் இப்போட்டி நடத்தப்படுகிறது.
கடந்த முறை நடைபெற்ற போட்டியில் ஆடவர் பிரிவில் தமிழகம் சாம்பியன் பட்டத்தையும், மகளிர் பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தது. சென்னையில் நடைபெறும் போட்டியில் ஆடவர் பிரிவில் மொத்தம் 65 அணிகள் கலந்து கொள்கின்றன. 780 வீரர், வீராங்கனைகள், 100 அலுவலர்கள், 195 பயிற்சியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். போட்டிகளை மொத்தம் 8,000 பார்வையாளர்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச கூடைப்பந்து சம்மேளன விதிகளின்டி நடைபெறும் இப்போட்டியில் அணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
முதல் 3 இடங்களைப் பெறும் அணிகளுக்கு மொத்தம் ரூ.21 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. ஆடவர், மகளிர் பிரிவுகளில் தலைசிறந்த வீரர், வீராங்கனைக்கு கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன.