

மும்பை: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 17-வது லீக் ஆட்டத்தில் நேபாள அணியை 10 விக்கெட்டுகளில் வீழ்த்தியது இத்தாலி அணி. இது அந்த அணிக்கு உலகக் கோப்பை அரங்கில் முதல் வெற்றியாக அமைந்தது. இதற்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களும், சகோதரர்களுமான அந்தோணி மற்றும் ஜஸ்ட்டின் மோஸ்க்கா முக்கிய காரணமாக அமைந்தனர்.
மும்பையின் வான்கடே மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. குரூப்-சி பிரிவில் இடம்பெற்றுள்ள இத்தாலி மற்றும் நேபாள அணிகள் இதில் பலப்பரீட்சை மேற்கொண்டன. டாஸ் வென்ற இத்தாலி அந்த முதலில் பந்து வீசி 19.3 ஓவர்களில் நேபாள அணியை 123 ரன்களில் ஆல் அவுட் செய்தது.
இத்தாலி தரப்பில் கிரிஷான் 3, பென் மனந்தி 2 மற்றும் அலி ஹசன், ஸ்மூட்ஸ், ஐஸ்ப்ரீத் சிங் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இத்தாலி விரட்டியது. அந்த அணிக்காக சகோதரர்களான அந்தோணி மோஸ்க்கா மற்றும் ஜஸ்ட்டின் மோஸ்க்கா ஆகியோர் இன்னிங்ஸை தொடங்கினர்.
இருவரும் இணைந்து 12.4 ஓவர்களில் 124 ரன்கள் எடுத்தனர். இதில் 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார் ஜஸ்ட்டின். 32 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார் அந்தோணி. அவரது இன்னிங்ஸில் 3 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
டி20 உலகக் கோப்பை தொடரில் சகோதரர்களாக இணைந்து அதிக ரன்களை சேர்ந்த வீரர்கள் என்ற சாதனையை மோஸ்க்கா சகோதரர்கள் படைத்துள்ளனர். இதற்கு முன்னர் கடந்த 2014 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானை சேர்ந்த சகோதரர்களான கம்ரான் மற்றும் உமர் அக்மல் இணைந்து 96 ரன்கள் எடுத்தது சாதனையாக இருந்தது.
இந்த வெற்றி இத்தாலி கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய தருணமாக அமைந்துள்ளது. உலக அளவில் கால்பந்து விளையாட்டுக்கு பிரசித்தி பெற்ற இத்தாலி இப்போது கிரிக்கெட்டில் உலகக் கோப்பை அரங்கில் வெற்றி கணக்கை தொடங்கி கவனம் ஈர்த்துள்ளது.