

வெலிங்டன்: நியூஸிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 75 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து விளையாடிய நியூஸிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்தது. நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 74.4 ஓவர்களில் 278 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
தனது முதல் அரை சதத்தை கடந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மிட்செல் ஹே 93 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 61 ரன்களும், 15-வது அரை சதத்தை கடந்த டேவன் கான்வே 108 பந்துகளில், 8 பவுண்டரி களுடன் 60 ரன்களும் சேர்த்தனர்.
டாம் லேதம் 11, கேன் வில்லியம்சன் 37, ரச்சின் ரவீந்திரா 5, டேரில் மிட்செல் 25, கிளென் பிலிப்ஸ் 18, ஜேக்கப் டஃபி 11, மைக்கேல் ரே 13 ரன்களில் நடையை கட்டினர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் ஆண்டர்சன் பிலிப் 3, கேமர் ரோச் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
73 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 10 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்தது. ஜான் கேம்பல் 14, ஆண்டர்சன் பிலிப் 0 ரன்களில் நடையை கட்டினர்.
பிரண்டன் கிங் 15, கவேம் ஹாட்ஜ் 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க 41 ரன்கள் பின் தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.