

கொல்கத்தா: கொல்கத்தா மைதானத்தில் கால்பந்து ரசிகர்களின் ரகளையால் அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி நிகழ்ச்சி பாதியில் முடிந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா 14 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார். அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி கலந்துகொண்ட நிகழ்ச்சி நேற்று முன்தினம் கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது மெஸ்ஸியை காண ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை டிக்கெட் வாங்கி ரசிகர்கள் மைதானத்தில் குவிந்திருந்தனர்.
ஆனால், மெஸ்ஸி மைதானத்திலிருந்து உடனே கிளம்பியதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை எறிந்தும், நாற்காலிகளை உடைத்தும், மேடையை அடித்தும் வன்முறை, ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் ரசிகர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதையடுத்து இந்த சம்பவத்துக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் மெஸ்ஸி கலந்துகொண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தாவை போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் நேற்று கொல்கத்தா பித்தன்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணை நடத்திய நீதிபதி, அவரை 14 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார். ‘கோட் இந்தியா டூர் 2025’ என்ற பெயரில் 3 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் மெஸ்ஸி என்பது குறிப்பிடத்தக்கது.