

ஒருநாள் சர்வதேசப் போட்டியின் மிகப்பெரிய வெற்றி நிகழ்ந்த நாள்தான் இது. இந்திய அணியின் 2023 இலங்கைத் தொடரில் ஒருநாள் போட்டி ஒன்றில் பெற்ற மிகப்பெரிய சாதனை வெற்றியை இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஈட்டிய மிகப்பெரிய வெற்றி முறியடித்தது.
சவுத்தாம்ப்டனில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே இதே தினத்தில் 2025-ம் ஆண்டு நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டி, ஏற்கெனவே இங்கிலாந்து தொடரை இழந்திருந்தாலும் முக்கியமான உலக சாதனைப் போட்டியாக அமைந்ததற்குக் காரணம், இங்கிலாந்து 50 ஒவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 414 ரன்களைக் குவிக்க, இலக்கை விரட்டிய தென் ஆப்பிரிக்கா அணி 21 ஓவர்கள் முடிவதற்குள்ளாகவே 72 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது. இங்கிலாந்து 342 ரன்களில் பெற்ற வெற்றி இன்று வரை ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் மிகப்பெரிய வெற்றியாக உள்ளது.
இதற்கு முன்னதாக 2023-ம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 391 ரன்களைக் குவிக்க பதிலுக்கு இலங்கை அணி வெறும் 74 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வி கண்ட 317 ரன்கள் தோல்விதான் ஆகப்பெரிய ஒருநாள் தோல்வியாக இருந்தது.
இங்கிலாந்தின் 5 விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் என்ற ஸ்கோரில், ஜோ ரூட் மற்றும் 21 வயதுடைய பேட்டர் ஜேக்கப் பெத்தல் ஆகியோரின் சதங்களும், ஜேமி ஸ்மித் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அரைசதங்களும் அடங்கும். பின்னர், வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தென் ஆப்பிரிக்காவின் முன்னணி வரிசை பேட்டர்களை வீழ்த்த, லெக்-ஸ்பின்னர் அடில் ரஷித் அதன் பின்வரிசையைச் சரித்தார்; இதனால் தென் ஆப்பிரிக்க அணி 21 ஓவர்களுக்குள்ளேயே 72 ரன்களுக்கு சுருண்டது.
21 வயதில், பெத்தேல் ஆடவர் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த இரண்டாவது இளம் இங்கிலாந்து வீரர் ஆனார். மேலும், சக சதமடித்த வீரரான ஜோ ரூட்டுடன் 182 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, ஒரு பெரிய ஸ்கோருக்கான அடித்தளத்தையும் அமைத்தார்.
முந்தைய லார்ட்ஸ் போட்டியில் 2வது வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றியதன் மூலம், 2006-க்குப் பிறகு இங்கிலாந்தின் சொந்த மண்ணில் முதல் ஒயிட்வாஷைப் பதிவு செய்யும் வாய்ப்பு தென் ஆப்பிரிக்காவிற்கு கிடைத்தது.
ஆனால் அவர்கள் ஆட்டத்தில் தீவிரம் அறவே இல்லை. அவர்கள் லுங்கி இங்கிடிக்கு ஓய்வளித்ததோடு, களத்தில் வழக்கத்திற்கு மாறாக மெத்தனமாக இருந்தனர். கேட்ச்களை விட்டனர். பவுலிங்கில் எந்தவித தாக்கமும் இல்லை, பேட்டிங்கில் சீக்கிரம் பெவிலியன் திரும்பி தொடரை வென்றதை குடித்துக் கொண்டாடும் அவசரம்தான் தெரிந்ததாக பின்னாளில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டதை இங்கு இங்கிலாந்தின் இந்த உலக சாதனை வெற்றியுடன் தென் ஆப்பிரிக்காவின் அலட்சியத்தினால் விளைந்த கேவலமான தோல்வியையும் நாம் குறிப்பிட வேண்டியது அவசியம்.