மெல்போர்ன் டெஸ்ட் ஒரு கேலிக்கூத்து என்பது பிட்சினால் அல்ல பேட்டர்களினால் - இயன் சாப்பல் சாடல்

Ian Chappell on Melbourne pitch

இயன் சாப்பல்

Updated on
2 min read

மெல்போர்ன் டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் என்று கிறிஸ்துமஸ் தினத்திற்கு மறுநாள் ஆடப்படும் போட்டி எப்போதும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முக்கியப் பங்கு வகிப்பது, பாக்சிங் டே டெஸ்ட் என்பது ஏறத்தாழ ஒரு கலாச்சார நிகழ்வு என்பதாகவே அங்கு பார்க்கப்படுகிறது. இந்த முறை ஆஷஸ் டெஸ்ட்டிற்கு சாதனைக் கூட்டம். ஆனால் டெஸ்ட் 2 நாட்களில் முடிந்தது கேலிக்கூத்து என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சாப்பல் கடுமையாகச் சாடியுள்ளார்.

அதாவது பிட்ச்சைக் குறைகூறிப் பயனில்லை, இது போன்ற பிட்ச்கள் காலங்காலமாக போடப்பட்டு வருபவைதான், இப்போதைய வீரர்கள் இதில் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு உறுதியும் உத்தியும் பொறுமையும் தைரியமும் இல்லாதிருக்கின்றனர் என்று சாடியுள்ளார்.

ஈஎஸ்பின் கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் எழுதிய பத்தி ஒன்றில் கூறும்போது, டெஸ்ட் கிரிக்கெட்டின் திருவிழா போன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மெல்போர்ன் டெஸ்ட் இந்த முறை கேலிக்கூத்தாக முடிந்துள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய இங்கிலாந்து மனங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளது. ஆனால் 2 நாட்களே காட்சிப்பொருளாகி டெஸ்ட் முடிந்து விட்டது .

பிட்ச் தயாரிப்பாளர் மேட் பேஜ் தயாரித்த பிட்ச் பவுன்ஸ், ஸ்விங் உள்ள பிட்ச் ஆகும். இருதரப்பு பேட்டர்களும் இலையுதிர் கால இலைகள் போல் சரிந்தனர். கொத்துக் கொத்தாக விக்கெட்டுகள் சரிந்தன. ஸ்கோர்கள் நூறை எட்டுவது கடினம் என்ற நிலை இருந்தது. 90,000 மக்கள் தங்களுக்கு நல்லதொரு காவிய டெஸ்ட் போட்டி கிடைக்கப்போகிறது என்று வந்திருந்தனர் கடைசியில் ஏமாற்றப்பட்டனர்.

பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலை ஏற்படுத்திய அதிர்ச்சியை விட பேட்டர்களின் எதிர்வினையிருக்கிறதே அடேயப்பா, இந்த விளையாட்டின் நீண்ட வரலாற்றில் இப்படிப்பட்ட ரவுடித்தனமான பந்தில் ஏதோ தாங்கள் மட்டுமே ஆட்டமிழக்க சபிக்கப்பட்டவர்கள் போன்ற ஒரு சலிப்புடனும், சோகப்புன்னகையுடனும் வெளியேறியது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இவர்கள் மட்டும்தான் இப்படிப்பட்ட கஷ்டமான பிட்சில் ஆடுகின்றனரா? இவர்கள் இப்படிப்பட்ட பிட்சில் ஆடும் முதல் ஆட்டக்காரர்களும் அல்ல கடைசி ஆட்டக்காரர்களும் அல்ல. ஆனாலும், அவர்களின் கோபத்தில், விளையாட்டின் கடந்த காலத்தைப் பற்றிய ஆழமான அறியாமையை வெளிப்படுத்தினர்.

டெஸ்ட் கிரிக்கெட் மனவெழுச்சி தரும் ஒன்றல்ல நூற்றாண்டு காலங்களுக்கும் மேலாக செங்கல் செங்கலாக கட்டி எழுப்பப்பட்ட பாரம்பரியம். வரலாற்றைப் புறந்தள்ளுவது இந்த டெஸ்ட் வடிவத்தையே அவமதிப்பதாகும். இப்படிச் செய்வதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலத்தையும் இவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறார்கள். பணமழை பொழியும் போட்டிகளில் ஆடி கூட்டுப்புழுவாக இருக்கும் இந்த நவீன நட்சத்திரங்கள் எத்தனை பேருக்கு கடந்த கால கிரேட்களை நினைத்துப் பார்க்க நேரம் இருக்கிறது?... என்று சாடும் இயன் சாப்பல், 1977ம் ஆண்டு இங்கிலாந்து ஆஸ்திரேலியா மெல்போர்ன் டெஸ்ட் போட்டியைப் பற்றி விதந்தோதி எழுதியுள்ளார்.

இதை விட மோசமான பிட்ச் ரிக் மெக்காஸ்கர் பாப் வில்லிஸ் பவுன்சரில் தாடை பெயர்ந்தார். ரத்தம் கொட்டியது. இதைவிட கொடுமையான நகை முரண் பந்து ஸ்டம்பில் பட்டு பவுல்டும் ஆனது.. வில்லிஸ், ஜான் லீவர், கிறிஸ் ஒல்ட் போன்ற அபாயகரமான பவுலிங்கை எதிர்கொண்டு போட்டியை வென்றதாகக் குறிப்பிட்டார். அந்தப் போட்டியில் 2வது இன்னிங்சில் 463 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து டெரிக் ராண்டாலின் அபாரமான 174 ரன்களுடன் இங்கிலாந்து இலக்குக்கு அருகில் வந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது என்று இப்போதுள்ள வீரர்களுக்கு ஏன் இந்த தைரியம், தன்னம்பிக்கை, டெக்னிக் இல்லை என்று சாடியுள்ளார்.

அதே போல் டான் பிராட்மேன் கேப்டன்சியில் 1937-ல் நடந்த மெல்போர்ன் டெஸ்ட் போட்டி எப்படி இரு அணிகளுக்குமான கடும் போட்டியாக இருந்தது, பிட்ச் படுமோசமானதுதான் ஆனால் இங்கு டான் பிராட்மேனின் கேப்டன்சி, பேட்டர்களின் பொறுமை மற்றும் உறுதி இப்போது உள்ள வீரர்களிடத்தில் எங்கே? என்று கேள்வி எழுப்பியுள்ளார் இயன் சாப்பல்.

இந்த இரண்டு போட்டிகளுடன் இப்போதைய மெல்போர்ன் டெஸ்ட் மற்றும் 2 நாட்களில் முடிந்த பெர்த் டெஸ்ட்டை ஒப்பிட்ட இயன் சாப்பல், இப்போதுள்ள வீரர்களுக்கு ஆசை இல்லை, உறுதியான தடுப்பு உத்தி மற்றும் பொறுமை இல்லாததால் உத்தியைக் கைவிட்டு தைரியம் காட்டுகிறேன் பேர்வழி என்று வெளியே செல்லும் பந்திற்கு மட்டையை விடுகின்றனர். சரணடைந்து விட்டு இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என்று பீற்றிக் கொள்கிறார்கள் என்று சாடியுள்ளார் இயன் சாப்பல்.

நவீன கிரிக்கெட் வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டைத் தாங்கள் மதிப்பதாகக் கூறிக்கொள்கின்றனர். அப்படி கூறிக்கொள்பவர்கள் என்ன மாதிரியான சூழல், பிட்ச் போன்றவற்றிற்கு எதிராகவும் குறைந்தது 100 ஓவர்களாவது ஆடி விட வேண்டும் என்ற உறுதியாக இருக்க வேண்டும். இது முடியவில்லையா, டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு இருண்ட காலம்தான்.

தங்களால் ஆடமுடியாததற்கு சாக்குப் போக்கே பிட்ச் பற்றிய புலம்பல். உங்களை மேம்படுத்திய இந்த டெஸ்ட் வடிவத்திற்கு கவுரவம் அளியுங்கள், இது டெஸ்ட் கிரிக்கெட், வலைப்பயிற்சியல்ல. சம்பளத்தை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொள்வதை விட தொழில்பூர்வ திறமையை வெளிப்படுத்த வேண்டும். எதிர்கால வீரர்களை உருவாக்குவதில் நடப்பு வீரர்கள் கடந்த கால கிரிக்கெட் கடின வரலாற்றைத் திரும்பிப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இயன் சாப்பல் அந்தப் பத்தியில் எழுதியுள்ளார்.

Ian Chappell on Melbourne pitch
கால்​பந்து போட்டிகளில் 1,000 கோல்கள்: போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ இலக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in