

டிராவிஸ் ஹெட்
சிட்னி டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட் இன்று 3-ம் நாள் ஆட்டத்தில் பெரிய சதம் ஒன்றை எடுத்து ஆட்டமிழந்தார். நேற்று 91 என்று இருந்த ஹெட், சதம் எடுத்து பிறகு 150 ரன்களையும் கடந்து 163 ரன்கள் எடுத்து உணவு இடைவேளைக்குப் பிறகு ஜேக்கப் பெத்தெல் பந்தை ஸ்வீப் ஆட முயன்று எல்.பி.டபிள்யூ ஆனார்.
இன்று காலை 166/2 என்று தொடங்கியது ஆஸ்திரேலியா, ஆனால் இங்கிலாந்து, ‘மெல்போர்ன் வெற்றியை மறந்து விட்டோம்... நாங்கள் பேக் டு ஃபார்ம்’ என்பது போல் மீண்டும் ஷார்ட் பிட்ச் உத்திக்கு வந்து தாறுமாறாக வீசியதோடு கேட்ச்களை கோட்டை விட்டனர். இதனால் டிராவிஸ் ஹெட் விரைவில் தொடரின் 3-வது சதத்தை எடுத்தார்.
எதிர்முனையில் மைக்கேல் நேசர் (24) என்ற நைட் வாட்ச்மேன் நிற்கிறார். அவருக்கு ஸ்லிப் இல்லாமல் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசுகின்றனர். இதை என்ன கேப்டன்சி என்று சொல்வது? பவுலிங் கோச் டிம் சவுதி என்ன செய்து கொண்டிருக்கிறார்? இல்லை இங்கிலாந்து ஆடுவதைப் பார்த்து மெக்கல்லமும், சவுதியும் ‘கொஞ்சம் முக்கு வரைக்கும் போயிட்டு வந்துர்றோம்’ என்று எஸ்கேப் ஆகிவிட்டார்களா என்று தெரியவில்லை.
டிராவிஸ் ஹெட்டிற்கு ஷார்ட் பிட்ச் உத்தி கைகொடுக்கவில்லை, ஆனால் அவரும் எத்தனை நேரம் பொறுமையாக இருப்பார் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை மைதானத்துக்கு வெளியே அடிக்க முயன்று அது மேலே எழும்பி ஸ்கொயர் லெக்கில் நின்றிருந்த வில் ஜாக்ஸ் கைக்குச் சென்றது அதை வாங்கி விட்டார் அவர். மேலும் மைக்கேல் நேசர் என்ற நைட் வாட்ச்மேனை எடுக்க முடியாமல் 3 ரிவியூவையும் அவருக்கே காலி செய்தனர். ஜோக்கர்கள் போல் செயல்படுகின்றனர் இங்கிலாந்து அணியினர்.
ஆஸ்திரேலியா ஸ்கோரில் ஒரு கட்டத்தில் 57.65% ஸ்கோரை ஹெட் மட்டுமே எடுத்திருந்தார். இங்கிலாந்தின் நூதன ஷார்ட் பிட்ச் நெகெட்டிவ் பவுலிங் உத்தியினால் டிராவிஸ் ஹெட் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் 150 ரன்களைக் கடந்தார். தனது 12 சதங்களில் 7 சதங்களை அவர் 150+ ஸ்கோராக மாற்றியுள்ளார்.
முதல் 12 சதங்களில் 150-க்கும் அதிகமான ஸ்கோர்களாக மாற்றியவர்களில் டான் பிராட்மேன், சேவாக், ஜாகிர் அப்பாஸ் 8 சதங்களை 150+ ஆக மாற்றியுள்ளனர். இங்கிலாந்தின் முன்னாள் தொடக்க வீரர் டெனிஸ் அமிஸ் தன் முதல் 11 சதங்களில் 8 சதங்களை 150-க்கும் கூடுதல் ரன்களாக மாற்றியுள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர்களில் பிராட்மேன் 8, ஸ்டீவ் வாஹ் 7, என்று முதல் 12-ல் 7 சதங்களை பெரிய சதங்களாக மாற்றியுள்ளனர். டிராவிஸ் ஹெட் கடைசியில் 166 பந்துகளில் 163 ரன்களுக்கு வெளியேறினார். இதில் 24 பவுண்டரிகள் 1 சிக்சர்.
ஸ்மித் இறங்கியவுடன் இங்கிலாந்து மீண்டும் நார்மல் கிரிக்கெட் கள வியூகத்திற்குத் திரும்பினர். ஆனாலும் என்ன செய்வது, லெக் ஸ்லிப்பில் கிராலி ஒரு கேட்சை விட்டார். கடைசியில் வில் ஜாக்ஸ் மீண்டும் ஹெட்டிற்கு ஒரு காட் அண்ட் பவுல்டு வாய்ப்பை விட்டார். இவ்வாறு இங்கிலாந்து இந்தத் தொடரில் மொத்தம் 16 கேட்ச்களை விட்டு சொதப்பியுள்ளனர்.
ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களுடன் ஆடி வருகின்றனர். ஸ்மித் 40 ரன்களுடனும் கவஜா 2 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.