நமன் தீர் ஆல்ரவுண்டர் என்றால் ஏன் பவுலிங் தருவதில்லை? - எழும் கேள்விகள்

நமன் தீர்

நமன் தீர்

Updated on: 
2 min read

நியூஸிலாந்துக்கு எதிரான 2 டி20 போட்டிகளிலும் இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்ற பினிஷிங் அதிரடி ஆட்டத்தை ஆடிய நமன் தீர், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நிறைவு செய்த காரணத்தால் அவரைத் தேர்வு செய்தது குறித்து நியாயம் கிடைத்து விட்டது. ஆனால் ஆல்ரவுண்டர் என்ற விதத்தில் அவரைத் தேர்வு செய்து விட்டு அவருக்கு பவுலிங் கொடுக்காமல் இருப்பது என்ன விதமான உத்தி, கேப்டன்சி அல்லது கம்பீரின் ஆலோசனை என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20-யில் இந்திய பவுலிங் தாதா என்று சொல்லப்பட்டவர்களுக்கெல்லாம் சரியான சாத்துமுறை நிகழ்ந்தபோது நமன் தீருக்கு ஒரு ஓவர் கூட கொடுக்கவில்லை ஸ்ரேயஸ் அய்யர். இது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 2-வது போட்டியிலும் ஸ்பின் பவுலிங்குக்குச் சாதகமாக இருந்த சூழ்நிலையில் நமன் ஒரு ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஆனாலும் தொடர்ந்து ஓவர்கள் கொடுக்கப்படவில்லை. இது என்ன மாதிரியான கேப்டன்சி என்ற கேள்விகள் எழுகின்றன.

இதற்கு இத்தகைய அதிசிந்தனை முடிவு? கொடுத்துப் பார்ப்பதுதானே, சாத்தியங்களைப் பயன்படுத்துவதுதானே கேப்டனின் வேலை. ஸ்ரேயஸ் அய்யர் தனிப்பட்டு செயல்படுகிறாரா? இல்லை கம்பீர் அங்கிருந்து கேப்டன்சி செய்து கொண்டிருக்கிறாரா? என்ற சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.

கடந்த மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் நமன் தீர் (Naman Dhir) தேர்ந்தெடுக்கப்பட்டது திடீரென நிகழ்ந்த ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் இது ஒரு குறிப்பிட்ட தேவையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். இந்திய அணியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட் (ஒருநாள் மற்றும் டி20) போட்டிகளில் ஒன்பது ஆண்டுகளாக இடம்பெற்று வரும் வாஷிங்டன் சுந்தர், அடிக்கடி ஏற்படும் காயங்களால் தொடர்ந்து விளையாட முடியாமல் போனார். அவருக்கு மாற்றாக ஒரு வீரர் தேவை என்பதை அணி நிர்வாகமும் தேர்வுக் குழுவும் உணர்ந்தன. 2017-ல் அறிமுகமானதிலிருந்து, வாஷிங்டன் இதுவரை 34 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

இந்த இடத்திற்கு, 7-வது அல்லது 8-வது வரிசையில் பேட்டிங் செய்யவும், அதே சமயம் ஐந்து முதல் ஆறு ஓவர்கள் வரை ‘ஃபிங்கர் ஸ்பின்’ பந்துவீசவும் கூடிய ஒரு வீரர் தேவைப்பட்டார். இது வாஷிங்டன் சுந்தரிடம் உள்ள தனித்துவமான திறன்களின் கலவையாகும். இந்தத் தேவைக்கு நமன் தீர் பொருத்தமானவராகத் தெரிந்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, நமன் தீர் இதுவரை விளையாடிய போட்டிகளிலும் சிறப்பாக தன்னை நிரூபித்து வருகிறார். இந்தத் தொடருக்கு முன்னதாக நமன் தீர் குறிப்பாக, நியூ சண்டிகரில் மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பேட்டிங்கில் 30 ரன்களை எடுத்தது அவரது குறிப்பிடத்தக்க இன்னிங்ஸாக அமைந்தது; பந்துவீச்சிலும் அவர் தனது பங்களிப்பை வழங்கினார். இந்தூரில் மே.இ.தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில், அவர் 39 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது, இந்திய அணி 223 ரன்களைக் காத்து வெற்றி பெற உதவியது.

அணித்தேர்வுக்குழுவினர் அவரை ஒரு வருங்கால ஆல்ரவுண்ட் திறமை என்றே அணியில் தேர்வு செய்துள்ளனர். ஆனால் பவுலிங் தராதது எதனால்? ஒருவேளை கம்பீரின் செல்லம் வாஷிங்டன் சுந்தர் வந்த பிறகு அணியில் தேர்வு செய்யலாம் என்று இவரை ஒரு ஆல்ரவுண்டராக செயல்பட விடாமல் செய்கின்றனரா? என்ற சந்தேகமும் எழுகின்றது.

மும்பை இந்தியன்ஸ் அணி நமன் தீரை ஐபிஎல் தொடரில் பந்து வீச்சில் பயன்படுத்தவில்லை என்பதே இவர்களின் முடிவுக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்களை அழிக்கும் ‘இம்பாக்ட் பிளேயர்’ முறை இருப்பதால் ஒரே ஒரு ரோலில் மட்டும் அங்குப் பயன்படுத்தப்பட்டார். ஆனால், சர்வதேச டி20-யில் இம்பாக்ட் பிளேயரெல்லாம் இல்லை, இங்கும் ஏன் ஒரே ரோலில் அவர் பயன்படுத்தப்பட வேண்டும்?

ஆனால், ஃபர்ஸ்ட்-கிளாஸ், லிஸ்ட் ஏ மற்றும் டி20 கிரிக்கெட் உள்ளிட்ட பிற போட்டிகளில் நமன் தீர் தொடர்ந்து பந்துவீச்சுத் தேர்வாக இருந்து வருகிறார். அப்போது உள்நாட்டுக் கிரிக்கெட்டை மாடல் ஆக வைத்து சர்வதேச கிரிக்கெட் அணித்தேர்வும், வீரர்களை உள்நாட்டுப் போட்டித் திறமையை வைத்தும் பயன்படுத்துவதில்லை என்று அப்பட்டமாகத் தெரிகிறது, ஐபிஎல்-ல் என்ன செய்கிறார்களோ அதை அப்படியே ஈயடிச்சான் காப்பி செய்வது என்று போய்க்கொண்டிருக்கிறதா இந்திய கிரிக்கெட்?

<div class="paragraphs"><p>நமன் தீர் </p></div>
பிரான்ஸ் நாட்டில் மீண்டும் மோதல்: 1,000 பேரை கைது செய்த போலீஸார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in