

ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் நுழைந்து தற்போது தென் ஆப்பிரிக்கா தொடரில் கலக்கி வரும் மேட் ரென்ஷா டர்பன் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 190 ரன்களையும், 2-வது இன்னிங்சில் 82 ரன்களையும் எடுத்து சரிந்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய மிட்ல் ஆர்டரில் இப்போது கோபுரமாக உயர்ந்து நிற்கிறார்.
அதோடு மட்டுமல்லாமல் நேற்று பாட் கமின்ஸ் இவரிடம் பந்தைக் கொடுக்க 7 ஓவர்கள் டீசன்ட்டான ஆஃப் ஸ்பின்னை வீசியதுடன் தென் ஆப்பிரிக்காவின் கேப்டன் தெம்பா பவுமாவை வீழ்த்தியது இவருக்குத் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் இது என்பதை எடுத்துக் காட்டுகிறது. இது ஒரு கிளாசிக் ஆஃப் ஸ்பின்னர் ஆட்டமிழப்பாகும், பந்தை நன்றாக ஃபிளைட் செய்ய பவுமா முன்னால் வந்து மட்டையைக் கொண்டு வந்து தடுத்தாட முயல பந்து பேட் பிறகு பேடில் பட்டு ஷார்ட் லெக்கில் மேடிசனிடம் கேட்ச் ஆனது. இது ஆஃப் ஸ்பின்னர் விரும்பும் ஒரு ஆட்டமிழப்பு வகையாகும். இப்போதெல்லாம் இப்படி அவுட் ஆவதைப் பார்ப்பது மிக அரிது.
பகுதி நேர ஸ்பின்னர் என்றே அறியப்படும் ரென்ஷா முதல் தரக் கிரிக்கெட்டில் 20 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். நேற்று முதல் டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார் என்பதோடு 7 ஓவர்கள் வீசி 16 ரன்களையே விட்டுக் கொடுத்துள்ளார்.
ரென்ஷாவின் கிரிக்கெட் மீள் வருகைகள்:
இந்தியாவில் மொஹீந்தர் அமர்நாத் அதிக முறை அணியிலிருந்து விலகியும் பிறகு உள்ளே வருவதுமாக இருந்த வீரர். ரென்ஷாவின் கரியரும் கிட்டத்தட்ட அந்த வகையிலானதே. 2016-17-ல் நீண்ட கால தொடக்க வீரர் என்ற பேரவாவுடன் இவர் 20 வயதில் ஆஸ்திரேலிய அணியில் நுழைந்தார். 2017-ல் பாகிஸ்தானுக்கு எதிராக சிட்னியில் 184 ரன்களை எடுத்தார். ஆனால் அடுத்தடுத்து பேட்டிங்கில் சொதப்ப, இவரது இடத்தை கேமரூன் பேங்கிராப்ட் பிடித்துக் கொண்டார்.
ஆனால், பேங்கிராப்டின் தலைவிதி 2018-ல் வேறு விதமாக எழுதப்பட்டிருந்தது. 2018 தென் ஆப்பிரிக்கா தொடரில் பந்தைச் சேதப்படுத்தி ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கே தலைகுனிவு ஏற்படுத்திய சம்பவத்தில் பேங்கிராப்ட் சிக்கி தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் அவசரகால பதிலியாக ரென்ஷா மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். இப்போதும் கூட இவருக்குத் தொடர்ச்சி கிடைக்கவில்லை, இதன் பிறகு 4 ஆண்டுகள் அவர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறவில்லை.
2023-ல் ஆஸ்திரேலிய அணி, இந்தியா வந்திருந்த போது இவர் மீண்டும் இந்திய அணிக்கு மிடில் ஆர்டர் வீரராக அழைக்கப்பட்டார். ஆனால் அதன் பிறகு மீண்டும் டிராப் செய்யப்பட்டார். ஆனால், அதன் பிறகுதான் ரென்ஷாவின் இப்போதைய மீட்டெழுச்சியின் முன்னெழுச்சி நடந்தது.
2025-26 ஆஸ்திரேலிய உள்நாட்டு ஷெஃபீல்ட் ஷீல்ட் கோப்பை சிகப்புப் பந்து கிரிக்கெட் தொடரில் 49.90 என்ற சராசரியில் 499 ரன்களை எடுத்தார். இதில் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 101 ரன்கள் உடனேயே தொடர்சியாக பிரிஸ்பனில் விக்டோரியாவுக்கு எதிராக பகலிரவு பிங்க் பந்துப் போட்டியில் 112 என்று அசத்தினார்.
இந்தச் சிறப்பான ஆட்டங்கள் அவரைத் அணித் தேர்வுக்குழு பரிசீலனைகளில் முன்னணியில் நிறுத்தின. ஆஷஸ் தொடரின்போது அவர் முதலில் அணியில் இடம்பிடிக்கவில்லை என்றாலும், உள்நாட்டுப் போட்டிகளில் அவர் காட்டிய தொடர்ச்சியான பங்களிப்பு, 2026 ஆகஸ்டில் வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் ஆடும் லெவனில் அவரை மீண்டும் சேர்க்குமாறு தேசிய தேர்வாளர்களைத் தூண்டியது.
அந்தப் போட்டியில், ஃபார்மில் இல்லாத ஜேக் வெதரால்டுக்குப் பதிலாக அவர் இடம்பெற்றார். இப்போது ரென்ஷா ஆஸ்திரேலியாவின் 3 வடிவத்துக்குமான ஒரு வீரராக முதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுதான் ஆஸ்திரேலிய செலக்ஷனுக்கும் நம்மூர் செலக்ஷனுக்கும் உள்ள வித்தியாசம். இங்கெல்லாம் ஒருமுறை போய் விட்டால் மீண்டும் வருவது மிக மிகக் கடினம். இப்படித்தான் பல சிறந்த வீரர்களின் கரியர் முடிந்து போயுள்ளது, சச்சின் போல் பெரிய வீரராக வந்திருக்க வேண்டிய அமோல் மஜும்தார் சர்வதேச கிரிக்கெட்டையே பார்க்காமல் இப்போது பயிற்சியாளர் பணியில் இருக்கிறார்.
கர்நாடகாவின் ஆகச் சிறந்த ரஞ்சி வீரர் சுதாகர் ராவ், கர்நாடகாவின் ஆகச்சிறந்த இடது கை ஸ்பின்னர் ரகுராம் பட், தமிழ்நாட்டின் வி.வி.குமார் போன்றோர் மறு நுழைவு காணாமலேயே காணாமல் போய் விட்டனர்.
இப்போது மட்டுமென்ன 3 வடிவ வீரரான ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ஷமி, கே.எல்.ராகுல், சிராஜ், சர்பராஸ் கான், போன்றோரை கவுதம் கம்பிர் தலைமை பயிற்சிக் குழு ஒற்றை வடிவ வீரர்களாகக் குறுக்கி வைத்துள்ளது. இதனால் இவர்களுக்கு அழுத்தம் அதிகரித்து அது ஆட்டத்தில் பிரதிபலிக்கிறது.