மரபான இடது கை சுழற்பந்து வீச்சை வெற்றிகரமாக மீட்டெடுக்கும் மானவ் சுதர்!

மரபான இடது கை சுழற்பந்து வீச்சை வெற்றிகரமாக மீட்டெடுக்கும் மானவ் சுதர்!
Updated on
2 min read

டி20 கிரிக்கெட் வந்த பிறகே ஸ்பின் பவுலிங் என்னும் கலை கிட்டத்தட்ட காணாமல் போயுள்ள நிலையிலும் அஸ்வின் போன்ற மரபும் நவீனமும் கலந்த ஸ்பின்னர் ஓய்வு பெற்ற பின்னரும் நேதன் லயன், மெஹதி ஹசன் மிராஸ் போன்ற மரபார்ந்த ஸ்பின்னர்கள் கோலொச்சுகின்றனர். இப்போது பழைய, அதாவது 1970-கள் 80-கள் பாணி ஸ்பின்னராக நமக்குக் கிடைத்துள்ளார் மானவ் சுதர்.

நேற்று கால்லேயில் அவர் இலங்கைக்கு எதிராக முதல் இன்னிங்சில் அற்புதமாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதை அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் 178 ரன்கள் முன்னிலை பெற்றது.

அவரது ஆக்‌ஷன், ரிலீஸ் பாயிண்ட், பிளைட், பந்துகள் வானிலிருந்து தரையிறங்கும் போது பேட்டரின் கணிப்பை ஏமாற்றி முன்னே பின்னே பிட்ச் ஆகும் ட்ரிஃப்ட், கோணம், வேக மாற்றம் என்று பிரமாதமான மரபான ஸ்பின் பவுலிங்கை அதன் அனைத்து நுட்பங்களுடன் மீட்டுக் கொண்டு வருவார் மானவ் சுதர் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

உள்நாட்டுப் போட்டிகளில் அறிமுகமான காலத்திலிருந்தே, இந்தியாவின் சுழற்பந்து வீச்சுப் பாரம்பரியத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வீரராக சுதர் பார்க்கப்பட்டு வருகிறார். இதுவரை அவரின் குறுகிய டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில், அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கான சிறந்த திறனை சுதர் வெளிப்படுத்தியுள்ளார்.

மழை அச்சுறுத்தல் இருந்த சூழலில், வெற்றியை நோக்கிச் செல்ல விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தது. அப்போது, ​​காலேயில் மூன்றாம் நாளில், தனது முதல் பந்திலேயே அனுபவம் வாய்ந்த தினேஷ் சண்டிமலை அவர் ஆட்டமிழக்கச் செய்தார். உள்ளே நோக்கி வந்த அந்தப் பந்து, பேட்ஸ்மேனை அந்தப் பாதையிலேயே ஆடத் தூண்டியது; பின்னர் லேசாகத் திரும்பி, பேட்ஸ்மேனின் கிளவ்வில் பட்டு ரிஷப் பந்தின் கைகளுக்குச் சென்றது. ஆட்டம் முழுவதும் அவர் எதிரணியினருக்குத் தொடர்ந்து சவால்களை அளித்துக்கொண்டே இருந்தார்.

சென்னையிலும் பெங்களூருவிலும் பயிற்சியாளராகப் பணியாற்றிய முன்னாள் லெக் ஸ்பின்னர் எல்.சிவராமகிருஷ்ணனுக்கு, சுதர் ஒரு அரிய வகை வீரர் என்பது தெரிந்த விஷயமே. உள்நாட்டுப் போட்டிகளில் ஏராளமான இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும், சுதாரைப் போல மிகச் சிலரே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

அவர் தனது பந்துவீச்சு முறையில் பலவிதமான மாறுபாடுகளைக் கொண்டிருப்பதில்லை; பெரும்பாலும் வழக்கமான முறைகளையே பின்பற்றி, பந்தை அதிகபட்ச சுழற்சிக்கு அனுப்புகிறார். ஆனால், அவரை உன்னிப்பாகக் கவனித்தால், அவரிடம் சில மாறுபாடுகள் இருப்பதைக் காணலாம் என்கிறார் எல்.சிவராம கிருஷ்ணன்:

“அவர் பந்தை வீசுவதற்குச் சற்று முந்தைய தருணத்தைக் கவனியுங்கள். அப்போது ஒரு கவண் கல் எறிவது போன்ற பிற்சாய்வு போன்ற ஓர் இயக்கம் இருக்கும்; இக்கால சுழற்பந்து வீச்சாளர்களிடம் இதை நீங்கள் காண முடியாது.

பிஷன் சிங் பேடி, எரபள்ளி பிரசன்னா மற்றும் எஸ். வெங்கடராகவன் ஆகியோரிடம் இது போன்ற ஓர் அசைவை நாம் பார்த்திருக்கிறோம்; ஆனால், இப்போதுள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் ஓட்டத்தின்போது (stride) அவசரமாகச் செயல்படுவதால், அந்த அசைவை மேற்கொள்வதில்லை.” என்று மிகச்சரியாக மானவ் சுதரின் மரபான ஸ்பின் பந்து வீச்சு இலக்கணத்தைக் கண கச்சிதமாக சித்திரப்படுத்தியுள்ளார் எல்.சிவராமகிருஷ்ணன்.

மரபான இடது கை சுழற்பந்து வீச்சை வெற்றிகரமாக மீட்டெடுக்கும் மானவ் சுதர்!
Hockey World Cup: இங்கிலாந்திடம் 2-4 என வீழ்ந்தது இந்தியா: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி அவசியம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in