

லவ்லினா போர்கோஹைன்
நகோயா: 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 14-வது நாளான நேற்று மகளிருக்கான குத்துச்சண்டையில் 75 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன், சீனாவின் ஸியி பாவுடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லவ்லினா போர்கோஹைன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற அவரது தாகம் 12 வருடங்களுக்கு பிறகு தணிந்தது. முத்தாய்ப்பாக இந்த தங்கப் தக்கத்தை லவ்லினா போர்கோஹைன் தனது பிறந்த நாளில் வென்றது சிறப்பம்சமாக அமைந்தது. நேற்று அவருக்கு 29-வது பிறந்த நாளாகும்.
கடந்த 2023-ம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் லவ்லினா போர்கோஹைன் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இதன் வாயிலாக ஆசிய விளையாட்டு வரலாற்றில் மகளிர் குத்துச்சண்டையில் தங்கப் பதக்கம் வென்ற 2-வது வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார் லவ்லினோ போர்கோஹைன். இதற் கு முன்னர் 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மேரிகோம் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
லவ்லினா போர்கோஹைன் கூறும்போது, “எனது பிறந்தநாள் சிறப்பு வாய்ந்த நாளாக அமைந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது பிறந்தநாளுக்கு நானே தங்கப் பதக்கத்தைப் பரிசாகத் தருவேன் என்று நினைத்தேன். அந்த வகையில் நான் எனக்கே ஒரு பரிசைப் பெற்றுக்கொள்வது இதுவே முதல் முறை. இதற்காக முழு மூச்சுடன் உழைத்தேன். தோற்றுவிடுவேன் என்று ஒரு வினாடி கூட நினைக்கவில்லை” என்றார்.