

இந்திய மகளிர் அணி வீராங்கனைகள்
ஆசிய விளையாட்டு மகளிர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியனும், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்ற சீனாவை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. இந்திய அணி தரப்பில் 10-வது நிமிடத்தில் சாக் ஷி ராணாவிடம் இருந்து பெற்ற பாஸை லால்ரெம்சியாமி, ரிவர்ஸ் ஸ்டிக் ஷாட் மூலம் கோல் அடித்தார். இதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது.
அணியின் வெற்றியில் கோல்கீப்பர் சவிதா பூனியாவின் பங்களிப்பும் முக்கியத்துவம் பெற்றது. 24-வது நிமிடத்தில் சீனாவுக்கு பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சவீதா பூனியா சிறப்பாக செயல்பட்டு சீனாவின் கோல் அடிக்கும் முயற்சியை தகர்த்தார். இந்திய அணி ஒரு கோல் மட்டுமே அடித்த போதிலும் போட்டி முழுவதும் தற்காப்பை பலப்படுத்திக் கொண்டு சீனாவை கோல் அடிக்க விடாமல் பார்த்துக் கொண்டது. மாற்று கோல்கீப்பராக களமிறங்கிய பிச்சு தேவியும், சீனாவின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலமுறை முட்டுக்கட்டை போட்டார்.
ஆசிய விளையாட்டில் 44 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. கடைசியாக இந்திய மகளிர் அணி 1982-ம் ஆண்டு தங்கப் பதக்கம் வென்றிருந்தது.
இதன் பின்னர் 1998 மற்றும் 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்திருந்தது. ஜப்பான் ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றதன் வாயிலாக வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் அணி நேரடியாக தகுதி பெற்றது.
இந்தியாவிடம் தோல்வி அடைந்த சீனா 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜப்பான் அணி ஷுட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
வில்வித்தையில் மேலும் 2 பதக்கம்
வில்வித்தையில் நேற்று மகளிருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்ற நிலையில் ரீகர்வ் கலப்பு அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் குங்கும் மொஹோத். தீரஜ் பொம்மதேவரா ஜோடி 3-5 (34-38, 35-37, 37-36, 37-37) என்ற கணக்கில் சீனா ஜோடியிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
தொடர்ந்து நடைபெற்ற ஆடவருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவில் தீரஜ் பொம்மதேவரா, சஞ்ஜய் போகே, நீரஜ் சவுகான் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1-5 என்ற கணக்கில் கொரியாவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது.
வெண்கலம் வென்றார் நேத்ரா குமணன்
ஆசிய விளையாட்டு போட்டியில் பாய்மரப்படகில் மகளிருக்கான டிங்கி (சிறு பாய்மரப்படகு) பிரிவில் இந்தியாவின் நேத்ரா குமணன் வெண்கலப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டில் 4-வது முறையாக பங்கேற்றுள்ள நேத்ரா குமணன் வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும்.
29 வயதாகும் சென்னையை சேர்ந்த நேத்ரா குமணன் 14 புள்ளிகளை குவித்து 3-வது இடம் பிடித்தார். தாய்லாந்தின் சோபியா மாண்ட்கோமெரி தங்கப் பதக்கமும், சிங்கப்பூரின் ஜானியா அங்க் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.