

புதுடெல்லி: இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அர்ஜெண்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸிக்கு ரூ.89 கோடி வழங்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
கடந்த 13-ம் தேதி கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் அவர் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஹைதராபாத், மும்பை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டன. இருப்பினும், கொல்கத்தாவில் நடந்த நிகழ்வில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு சதத்ரு தத்தா என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். நுழைவுக்கட்டணமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் ரூபாய் வரை ரசிகர்களிடம் வசூலிக்கப்பட்டது. சால்ட் லேக் மைதானத்துக்கு வந்த மெஸ்ஸியை, அரசியல்வாதிகளும், பிரபலங்களும் சூழ்ந்ததால் , ரசிகர்களால் அவரை பார்க்க முடியவில்லை.
10 நிமிடங்களிலேயே மைதானத்தை விட்டு மெஸ்ஸி வெளியேறினார். மெஸ்ஸியை பார்க்க முடியாததால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள், மைதானத்தில் இருந்த நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். அந்த இடமே போர்க்களமானது. பல மணி நேரம் போராடி போலீஸார் நிலைமையை கட்டுப்படுத்தினர்.
கொல்கத்தாவில் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த சதத்ரு தத்தாவிடம் இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் அவர் சில முக்கிய தகவல்களைக் கூறியுள்ளார். அதாவது சால்ட் லேக் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது, எதிர்பாராத வகையில் பலரும் மைதானத்துக்குள் வந்துவிட்டதாகவும் அவர்கள் மெஸ்ஸியை பின்னால் இருந்து தொட்டதும், கட்டிப்பிடித்ததும் அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருவதற்கு மெஸ்ஸிக்கு வழங்கப்பட்ட தொகை ரூ.89 கோடி என்று சதத்ரு தத்தா தெரிவித்துள்ளார். அரசுக்கு வரியாக ரூ.11 கோடியும் வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, “மெஸ்ஸி வருகைக்கு மட்டும் ரூ.100 கோடி ஆனது. இந்த பணத்தில் 30 சதவீதம் விளம்பரதாரர்கள் மூலமும், மேலும் 30 சதவீதம் டிக்கெட் கட்டணம் மூலமும் வசூல் செய்யப்பட்டுள்ளது. சால்ட்லேக் மைதானத்தில் கட்டுப்பாட்டுடன் நடக்கும்படி தொடர்ந்து அறிவித்தும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
மெஸ்ஸியை சூழ்ந்து கொண்ட விதம் அவருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியதுடன் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மைதானத்தில் 150 பேருக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டது. ஆனால், முக்கிய நபர் ஒருவர் வந்த போது கூட்டம் 3 மடங்காகியதுடன் அவர் என்னை நிர்பந்தம் செய்தார். அந்த செல்வாக்கு மிக்க நபர் வந்த பிறகு மெஸ்ஸியின் பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது” என்றார்.
மெஸ்ஸியின் வருகையின்போது சால்ட்லேக் மைதானத்தில் நடந்த ரகளை தொடர்பாக சதத்ரு தத்தா தற்போது கைதாகி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டதுடன் குளறுபடி குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.