

பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் கோரி, நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடும் குளிரில் இரவு, பகலாக 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்.
சென்னை: பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியர்கள் கடந்த 18-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 750-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்ற நிலையில், அரசுக்கு எதிராக செவிலியர்கள் கோஷங்களை எழுப்பியதால், அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து, செவிலியர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், ஊரப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
நேற்று 4-வது நாளாக பகல், இரவாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் பனியால் செவிலியர்களில் பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அவர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். அதேபோல தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசு மருத்துவர் சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மீண்டும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழக சுகாதாரத் துறையில் 10 ஆண்டுகளாக தற்காலிகப் பணியாளர்களாக பணியாற்றும் 8 ஆயிரத்துக்கும் கூடுதலான செவிலியர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று 4 நாட்களாக போராடி வருகின்றனர். அவர்களை பணி நிரந்ந்தரம் செய்ய முடியாது என்று தமிழக அரசு அறிவித்திருப்பது, ஆட்சியாளர்களின் ஆணவத்தைக் காட்டுகிறது.
இப்போது ஒப்பந்த செவிலியர்கள் எவ்வாறு நியமிக்கப்பட்டார்களோ, அதேபோல் தான் கடந்த 2004-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 45 ஆயிரம் ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். 2006-ம் ஆண்டில் பாமக ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, அவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்தார்.
அதே போல் இப்போது செய்ய எந்த தடையும் இல்லை. அரசு அவ்வாறு செய்யத் தவறினால், வரும் தேர்தலில் மக்கள் அதிரடியான தீர்ப்பை வழங்குவார்கள். அதன்பின் அமையும் ஆட்சியில் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.