

ரவீந்திர ஜடேஜா
குவாஹாட்டி: சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறியது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது என ரவீந்திர ஜடேஜா தனது உணர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
நடப்பு சீசனில் டிரேடிங் முறையில் ரவீந்திர ஜடேஜாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. இந்நிலையில், இந்த சீசனில் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணியும் திங்கட்கிழமை அன்று லீக் ஆட்டத்தில் விளையாடின. இதில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்துக்கு பிறகு ஜடேஜா கூறியது: “சிஎஸ்கே அணிக்காக நான் 12-13 ஆண்டுகள் விளையாடி உள்ளேன். அது மாதிரியான அணியில் இருந்து வெளியேறியது முதலில் எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அது மிகவும் உணர்வுபூர்வமானது.
ஆனால், நம் பயணத்தில் இதுவும் ஒரு பகுதி என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இதில் நல்ல விஷயம் என்னவென்றால் இப்போது நான் அங்கம் வகிக்கும் அணியில்தான் எனது முதல் ஐபிஎல் பட்டத்தை வென்றேன் என்பதுதான்.
அந்த வெற்றித் தருணம் என்னுள் அப்படியே மாறாத பசுமையான நினைவாக உள்ளது. எனது இளையோர் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு ஐபிஎல் பயணத்தை தொடங்கினேன். முதல் சீசனிலேயே பட்டம் வென்றேன். அந்த நினைவுகளை நேர்மறை மனநிலையாக இப்போது பார்க்கிறேன். எனது நோக்கம் எல்லாம் புதிய குழுவிடமிருந்து எந்த அளவுக்கு என்னால் சில விஷயங்களை அறிந்து கொள்ள முடியும் என்பதிலும், என்னுடைய அனுபவத்தை பகிர்வதிலும் தான் உள்ளது.
Gun-fire கொண்டாட்டம் குறித்து...
நான் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது விக்கெட் வீழ்த்தியதும் துப்பாக்கி சூடு கொண்டாட்டத்தில் ஈடுபடுவேன். அதை தொடரும் வகையில் நேற்றைய ஆட்டத்திலும் செய்தேன். துபே மாதிரியான ஒருவரின் விக்கெட்டை எடுத்த பிறகு அதை செய்திருந்தேன். ஏனெனில், அவருக்கு அடுத்து வரும் பேட் செய்ய வெறும் வீரர்கள் பந்து வீச்சாளர்கள் தான். அதனால் அந்த தருணத்தில் அப்படி செய்தேன்” என தெரிவித்துள்ளார்.