

சச்சின் டெண்டுல்கரின் அதிக டெஸ்ட் ரன்கள் சாதனையை முறியடிக்கும் தருணத்தில் ஜோ ரூட் பேட்டிங் உத்தியில் சரிவடைந்து புதிய எல்.பி.டபிள்யூ. பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார். ஆம்! கடைசி 11 இன்னிங்ஸ்களில் 9 முறை எல்.பி.டபிள்யூ ஆகியுள்ளார் ஜோ ரூட்.
இந்தியாவின் சுவர் ராகுல் திராவிட் டெஸ்ட் போட்டிகளில் ஒரு கட்டத்தில் தாறுமாறாக பவுல்டு ஆக ஆரம்பித்ததால் அப்போது அவர் இனி ஆடிப்பயனில்லை ஓய்வு பெறுவது நல்லது என்று முடிவெடுத்தார். அதேதான் ஜோ ரூட்டுக்கும் பொருந்தும் என்று சொல்லலாம். ஏனெனில் திடீரென மாற்றங்களை சீரான முறையில் செயல்படுத்த முடியாது.
இது வெறும் டெக்னிக் பிரச்சினை மட்டுமல்ல, கண்பார்வை, கால்நகர்த்தல், பந்து வரும்போது தலையின் கண்ணின் நிலை, பேட் கிரிப், பேட் எந்த இடத்திலிருந்து வருகிறது என்று நிறைய உள்ளது. வரவர ‘நேர் நேர் தேமா’ பந்துகளிலும் கூட ஜோ ரூட் எல்.பி.டபிள்யூ ஆவதைத்தான் பார்த்து வருகிறோம்.
குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக யாரும் எக்ஸ்பிரஸ் ஸ்பீட் வீசுவதில்லை என்பதால் விக்கெட் கீப்பர்கள் ஸ்டம்புக்கு அருகில் நின்று கீப் செய்யும் போது ஜோ ரூட்டின் ‘கார்டு’ உள்ளிட்டவைகள் மாறி அவருக்குக் கடும் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ரூட் பேட் செய்யும் போது ஸ்டம்புக்கு அருகில் வந்தார், அதே ட்ரெண்டை நியூஸிலாந்தும், இப்போது பாகிஸ்தானும் கடைபிடித்து வருகின்றன. பொதுவாக கிரீசிற்கு 2 அடி முன்னால் நின்று பந்துகளை எதிர்கொள்வதன் மூலம் எல்.பி.டபிள்யூக்களைத் தவிர்த்து வந்த ரூட், விக்கெட் கீப்பர்கள் முன்னால் வந்து நிற்கத் தொடங்கியவுடன் கிரீசிற்குள் நின்று ஆட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
அதுவும் அனைத்துப் பந்துகளையும் பேட்டில் ஆட வேண்டி வருவது பேட்டருக்கு எப்போதும் ஒரு பாதுகாப்பின்மை உணர்வைத் தரும், எங்கு எட்ஜ் ஆகி விடுமோ என்று அப்படிப்பட்ட சூழ்நிலையில் பந்தை விடுவது என்பது பிரதானமாக இருக்கும் இந்த மனநிலையில் பந்து திடீரென உள்ளே வரும் போது ஜோ ரூட் லேட் ஆக ரியாக்ட் செய்கிறார். பந்தின் லைனுக்குக் குறுக்கே கால்காப்பைக் கொண்டு செல்கிறார். இடது காலை சற்றே முன் நோக்கி நகர்த்துகிறார் ஜோ ரூட் இதுதான் அவர் பிரச்சினை.
முன்னாளைய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் டெரி ஆல்டர்மென் கிரகாம் கூச்சை இப்படி சொல்லி சொல்லி எல்.பி. எடுத்தார். ஆனால் ஜெஃப்ரி பாய்க்காட்டிடம் ஆலோசனை பெற்ற கிரகாம் கூச் முன் காலை பந்தின் திசைக்குக் கொண்டு வராமலும் வலது காலை பின்னால் குறுக்காக நகர்த்துவதையும் விடுத்து நேராக பேக்ஃபுட் சென்றார். இது அவருக்குக் கைகொடுத்தது, ரூட்டிற்கு அது கைகொடுக்குமா என்று தெரியவில்லை.
அப்படி இவர் டெக்னிக்கை எல்.பி.டபிள்யூவைத் தவிர்க்க மாற்றினால், வெளியே ஸ்விங் ஆகும் பந்துகளில் விழுங்கப்படுவார் என்று சில கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆகவே ஒரு முட்டுச் சந்தில் வந்து சிக்கியுள்ளார் ஜோ ரூட். இதிலிருந்து அவர் மீள்வாரா இல்லை இதே அவரது முடிவாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.