

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சு ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில், போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான இலங்கை, அந்த அணியின் வேகப் பந்துவீச்சு ஆலோசகராக முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்காவை நேற்று நியமனம் செய்துள்ளது.
இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சு ஆலோசகராக மலிங்கா வரும் 2027-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வரை செயல்படுவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச போட்டிகளில் மலிங்கா பெற்றுள்ள மிக நீண்ட அனுபவம் இலங்கை அணிக்கு வரும் டி20 உலகக் கோப்பையில் பெரும் உதவியாக இருக்கக் கூடும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அணிக்காக 84 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள லசித் மலிங்கா மொத்தம் 107 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். 42 வயதாகும் அவர் டி20 லீக் தொடர்களில் பல்வேறு அணிகளுக்கு பயிற்சியளித்துள்ள அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.