

சென்னை: சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையத்துக்கு செல்லும் வழித்தடத்தில் நேற்று காலை 6 மணிக்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
அதாவது ஆலந்தூர் - விமான நிலையம் இடையே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து தொழில்நுட்பகோளாறை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையத்துக்கு நேரடியாக மெட்ரோ ரயில் சேவை இல்லாததால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். தற்காலிகமாக சேவை ரத்தானதால் பயணிகள் ஆலந்தூரில் இறங்கி, விம்கோ நகர் - விமான நிலையம் செல்லும் தடத்துக்கு சென்று, மெட்ரோ ரயிலில் சென்றனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தொழில்நுட்ப கோளாறால், சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோவுக்கு நேரடி மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் பயணிகள் ஆலந்தூரில் இறங்கி, மாறி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நேற்று இரவு வரை சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு, அண்ணா நகர் வழியாக விமான நிலையத்துக்கு நேரடி மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது.