

சியோல்: கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
தென் கொரியாவிலுள்ள சியோல் நகரில் இந்த கொரியா மாஸ்டர் பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அஷ்மிதா சாலிஹாவும், சீனாவின் ஹான் கியான்ஜியும் மோதினர். இதில் அஷ்மிதா சாலிஹா 14-21, 21-14, 21-14 என்ற புள்ளிகள் கணக்கில் ஹான் கியான்ஜியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் பிஎஃப்டபிள்யூ உலக டூர் சூப்பர் 300 போட்டிகளில் பட்டம் வென்ற 5-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அஷ்மிதா சாலிஹா தட்டிச் சென்றார்.
இதற்கு முன்னர் இதுபோன்ற போட்டிகளில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து, தேவிகா சிஹாக், தன்வி சர்மா ஆகியோர் பட்டம் வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.