

புதுடெல்லி: இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரராக உள்ள அபிஷேக் சர்மா, நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார். இதனால் அவர் மீது அதிக அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியதாவது: அபிஷேக் சர்மா, மிகச் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. இறுதிப் போட்டிக்கு அவரை அணி நிர்வாகம் தேர்வு செய்யவேண்டும். இதற்கு முந்தைய போட்டிகளில் அவரது செயல்திறனைப் பார்த்து முடிவு செய்யக்கூடாது. அபிஷேக் சர்மா மீது அணி நிர்வாகம் நம்பிக்கை வைக்கவேண்டும்.
நான் சிறப்பாக விளையாட முடியும், நான் நிச்சயம் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்துவேன் என்று அபிஷேக் சர்மாவும் தன் மீது நம்பிக்கை வைக்கவேண்டும். இந்தத் தொடரில் இன்னும் ஒரே ஒரு ஆட்டம்தான் உள்ளது. அதுவும் இறுதிப் போட்டி. இங்கிலாந்துடனான அரை இறுதி ஆட்டம் சிறப்பாக இருந்தது. இந்தப் போட்டி கடைசி ஓவர் வரை கடினமாகச் செல்லும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
ஜஸ்பிரீத் பும்ரா மிகவும் சிறப்பாக பந்துவீசுகிறார். இந்தப் போட்டியின் போது பந்துவீச்சாளர்களுக்கு அதிக அளவில் அழுத்தம் இருந்தது. இருந்தபோதும் அவர், இறுதிக்கட்ட ஓவர்களில் மிகவும் அபாரமாக பந்துவீசினார். இதனால்தான் அவர், உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.
உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் அவர்தான். அனைவரிடமிருந்தும் பாராட்டும், மரியாதையும் பெற அவர் தகுதியானவர். அதேபோல் பேட்டிங்கில், சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்தது மிகச்சிறப்பு. அவர், ஒரு திறமையான கிரிக்கெட் வீரர். கடந்த 2 போட்டிகளிலும் அவர் அபாரமாக விளையாடினார். இவ்வாறு கபில்தேவ் கூறினார்.