

பயிற்சியாளர் ஸ்ரீஜேஷ் உடன் இந்திய வீரர்கள்.
சென்னை: சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வரும் 14-வது ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி, இந்தியாவுடன் மோதுகிறது.
2 முறை சாம்பியனான இந்திய அணி 9 வருடங்களுக்குப் பின்னர் சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் தீவிரமாக விளையாடி வருகிறது. நடப்பு தொடரில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி 29 கோல்களை அடித்துள்ளது. லீக் சுற்றில் எதிரணியிடம் இருந்து ஒரு கோலை கூட வாங்காமல் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு இருந்தது. அதேவேளையில் கால் இறுதி சுற்றில் இந்திய அணி ஷுட் அவுட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை தோற்கடித்து அரை இறுதியில் கால் பதித்தது.
பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி இறுதிக்கட்டத்தில் டிஃபன்ஸில் செய்த தவறால் போட்டியை ஷுட் அவுட்டுக்கு எடுத்துச் சென்றது. ஷுட் அவுட்டில் கோல்கீப்பர் பிரின்ஸ்தீப் சிங் அற்புதமாக செயல்பட்டதால் இந்திய அணி வெற்றியை வசப்படுத்தியது.
இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி டிஃபன்ஸில் வலுவாக செயல்படுவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். மேலும் பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பலமுறை ‘டி’ பகுதிக்குள் பந்தை கொண்டு சென்ற போதிலும் எதிரணி வீரர்களிடம் பறிகொடுத்தது. இந்த விஷயத்திலும் இந்திய அணி கவனம் செலுத்த வேண்டும். 7 முறை சாம்பியனான ஜெர்மனி அணி லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்தியிருந்தது. தொடர்ந்து கால் இறுதியில் பிரான்ஸ் அணியை ஷுட் அவுட்டில் 3-1 என தோற்கடித்து இருந்தது.
ஷுட் அவுட்டில் கோல்கீப்பர் ஜாஸ்பர் டிட்சர் அற்புதமாக செயல்பட்டு இருந்தார். முன்னதாக மாலை 5.30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் - அர்ஜெண்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.