ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை: பெல்ஜியத்தை ஷுட் அவுட்டில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை: பெல்ஜியத்தை ஷுட் அவுட்டில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா
Updated on
2 min read

சென்னை: 14-வது ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தத் தொடர் விறுவிறுப்பான நாக் அவுட் கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் கால் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் - நியூஸிலாந்து அணிகள் மோதின.

இதில் ஸ்பெயின் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. ஸ்பெயின் அணி தரப்பில் நிக்கோலஸ் முஸ்டாரோஸ் (2-வது நிமிடம்), ஜோசப் மார்ட்டின் (10-வது நிமிடம்), ஆல்பர்ட் செர்ராஹிமா (12-வது நிமிடம்), புரூனோ அவிலா (60-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

60-வது நிமிடத்தில் நியூஸிலாந்து அணியின் சேம் லின்ட்ஸ் பீல்டு கோல் அடித்து ஆட்டத்தை 3-3 என சமநிலைக்கு கொண்டுவந்தார். இதனால் போட்டி டிராவில் முடிவடைந்து வெற்றியை தீர்மானிக்க ஷூட்அவுட்டுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில நொடிகளிலேயே கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை புரூனோ அவிலா கோலாக மாற்றி ஸ்பெயின் அணியை வெற்றி பெறவைத்தார்.

2-வது கால் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி - பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட 60 நிமிடங்களில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. ஜெர்மனி அணி தரப்பில் அலெக் ஸ்க்வெரின் (30-வது நிமிடம்), பால் கிளாண்டர் (36-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். பிரான்ஸ் அணி சார்பில் மாலோ மார்டினாச் (30-வது நிமிடம்), ஹூகோ டோலு (55-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க நடத்தப்பட்ட ஷுட் அவுட்டில் 7 முறை சாம்பியனான ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அரை இறுதி சுற்றில் கால்பதித்தது.

3-வது கால் இறுதி ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான அர்ஜெண்டினா, நெதர்லாந்துடன் மோதியது. இதில் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் கால் பதித்தது. அர்ஜெண்டினா அணி தரப்பில் 55-வது நிமிடத்தில் தாமஸ் ரூயிஸ், பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றி அசத்தினார்.

கடைசி கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா - பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்க நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதில் கோல் அடிக்கும் இந்திய அணியின் முயற்சியை பெல்ஜியம் அணியின் கோல்கீப்பர் அற்புதமாக தடுத்தார். 13-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி முதல் கோலை அடித்து இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்த கோலை காஸ்பர்ட் கோர்னெஸ் மாசன்ட் பீல்டு கோலாக அடித்து அசத்தினார்.

முதல் பாதியின் இறுதிப் பகுதியில் இந்தியாவுக்கு 2-வது பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதில் இந்திய வீரர் மன்மீத் சிங் இலக்கை நோக்கி அடித்த பந்தை பெல்ஜியம் அணி தனது டிஃபன்ஸால் கோல் விழவிடாமல் தடுத்தது. முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

39-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு 3-வது பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதையும் பெல்ஜியம் அணியின் தற்காப்பு அரண் தடுத்து நிறுத்தியது. 45-வது நிமிடத்தில் இந்திய அணி பதிலடி கொடுத்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் கோலாக மாற்றினார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. அடுத்த நொடியிலேயே பெல்ஜியம் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணியின் கோல் அடிக்கும் வாய்ப்பை இந்திய அணியின் கோல்கீப்பர் பிரின்ஸ் தீப் சிங் அபாரமாக தடுத்தார்.

தொடர்ந்து 48-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஷர்தா திவாரி கோலாக மாற்ற இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 57-வது நிமிடத்தில் இந்திய அணியின் பீல்டு கோல் அடிக்கும் முயற்சியை பெல்ஜியம் கோல்கீப்பர் அலெக்ஸிஸ் தடுத்தார். 59-வது நிமிடத்தில் இந்திய அணியின் பலவீமான டிஃபன்ஸால் பெல்ஜியம் அணியின் நேதன் ரோகி பீல்டு கோல் அடித்தார்.

இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 60 நிமிடங்களில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க ஷுட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை: பெல்ஜியத்தை ஷுட் அவுட்டில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா
நூறாவது சதத்தை எட்டுவாரா விராட் கோலி? - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in